மக்களவைத் தேர்தல் ஒவ்வொரு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அதன்படி, ஐந்து கட்டங்களாக 428 தொகுதிகளில் நடைபெற்று முடிந்துள்ளது. அதனைத் தொடர்ந்து, இன்று (25-05-24) 7 மணியளவில் ஆறாம் கட்டமாக 58 தொகுதிகளில் நடைபெற இருந்தது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் நேற்று முன்தினம் (23-05-24) மாலை 6 மணியுடன் முடிவடைந்தது. அதன்படி, இன்று காலை அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு தொடங்கி வருகிறது. இதற்காகப் பொதுமக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.
அதன்படி, பீகார் மாநிலத்தில் 8 தொகுதிகளுக்கும், ஹரியானாவில் 10 தொகுதிகளுக்கும், ஒடிசா மாநிலத்தில் 6 தொகுதிகளுக்கும், மேற்கு வங்கத்தில் 8 தொகுதிகளுக்கும், ஜார்க்கண்ட் மாநிலத்தில் 4 தொகுதிகளுக்கும், உத்தரப்பிரதேசத்தில் 14 தொகுதிகளுக்கும், ஜம்மு-காஷ்மீரில் 1 தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மேலும், டெல்லியில் மொத்தம் உள்ள 7 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெற்று வருகிறது.
மக்களவைத் தேர்தலுடன் ஒடிசா மாநிலத்தில் உள்ள 42 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்குத் தொடங்கிய இந்த வாக்குப்பதிவு இன்று மாலை 6 மணியுடன் முடிவடைகிறது. தேர்தலை அமைதியான முறையில் நடத்துவதற்கான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. மேலும், பாதுகாப்புப் பணிக்காக அனைத்து தொகுதிகளுக்கும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பதற்றமான, மற்றும் மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகளுக்கு வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதற்கிடையே, மேலும், ஜூன் 1ஆம் தேதி நடைபெறும் கடைசி கட்ட வாக்குப்பதிவை எதிர்கொண்டு அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னதாக, ஒடிசாவில் மொத்தம் உள்ள 147 சட்டமன்றத் தொகுதிகளில் 2 ஆம் கட்டமாக 35 தொகுதிகளுக்கு கடந்த 20ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அதே போல், முதல் கட்டமாக 28 இடங்களுக்குக் கடந்த 13 ஆம் தேதி 4 ஆம் கட்ட மக்களவைத் தேர்தலுடன் சட்டமன்றத்திற்கு வாக்குப்பதிவு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.