கரோனா பரவல் காரணமாக ஜன.26 தேதி நடைபெற இருந்த கிராம சபை கூட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் குறைந்து வந்த கரோனா பரவல் தற்போது மீண்டும் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. இதனால் மத்திய மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. தொற்றின் வேகத்தைக் கட்டுப்படுத்த அதிக அளவு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் தொற்று எண்ணிக்கை குறையாமல் இருந்து வருகிறது. தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை விஸ்வரூபம் எடுத்து வருகிறது. நேற்று பாதிப்பு எண்ணிக்கை முன் எப்போதும் இல்லாத அளவாக 30 ஆயிரத்தை கடந்தது. இதனால் தமிழக அரசு தொடர்ந்து இரவு நேர ஊரடங்கை கடைப்பிடித்து வருகிறது. இருந்தும் தொற்று எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்வதால் அதிகாரிகள் இதுதொடர்பாக தொடர் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்கள். கூட்டம் சேருவதை முடிந்த அளவு தடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில் தற்போது வரும் 26ம் தேதி நடைபெற இருந்த கிராம சபை கூட்டம் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.