வில்லேஜ் குக்கிங் சேனல் என்ற யூடியூப் சேனலில் வரும் சமையல் வீடியோவில் ‘இன்னைக்கு ஒரு புடி’என்ற வசனத்தின் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தவர் பெரியதம்பி தாத்தா. இவர் சமீபத்தில் இதயநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக வில்லேஜ் குக்கிங் சேனல் நிர்வாகி சுப்ரமணியன் வேலுசாமி எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில், “தாத்தா இதய நோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது நல்ல நிலையில் உள்ளார். உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி” எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த சூழலில் வில்லேஜ் குக்கிங் சேனலில் தோன்றும் தாத்தாவின் மருத்துவ செலவுக்கு உதவ காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல்காந்தி எம்.பி. மறுத்துவிட்டார் என பொய் செய்திகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. இந்நிலையில் இந்த வதந்தியை சுப்ரமணியன் வேலுசாமி திட்டவட்டமாக மறுத்துள்ளார். இது குறித்து அவர் வதந்தியாக பரப்பப்பட்ட செய்தியை மேற்கோள்காட்டி எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இது முற்றிலும் பொய்!. எங்களது வளர்ச்சிக்கு உதவிய அன்பான மனிதன் ராகுல் அண்ணாவின் மீது இப்படி எங்களையே பயன்படுத்தி அவதூறு பரப்புவது மிகுந்த மன வருத்தத்தை தருகிறது!.
இப்படி பொய் செய்திகளை பரப்புபவர்களது கட்சித் தலைமை இதனை கட்டுப்படுத்த வேண்டுகிறோம்” எனத் தெரிவித்துள்ளார். கடந்த தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக வில்லேஜ் குக்கிங் சமையல் நிகழ்ச்சியில் ராகுல் காந்தி கலந்து கொண்டார். அப்போது கிராமத்துச் சூழலில் ஓலைப்பாயில் சம்மணம் போட்டு அமர்ந்து காளான் பிரியாணியை ரசித்து சாப்பிட்ட வீடியோ மக்கள் மத்தியில் வைரலானது குறிப்பிடத்தக்கது.