விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ளது லிங்கா ரெட்டிபாளையம். இந்த ஊரைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம், வயது 55. விவசாயியான இவர் தனது அண்ணன் ரங்கநாதன் என்பவரிடமிருந்து ஒரு ஏக்கர் 20 சென்ட் நிலத்தைக் கிரையம் பெற்றுள்ளார். கிரையம் பெற்ற நிலத்தை தன் பெயருக்குப் பட்டா மாற்றித் தரக் கோரி கிராம நிர்வாக அலுவலரிடம் முறைப்படி விண்ணப்பித்துள்ளார்.
அதன்பிறகு பட்டா மாறுதல் செய்து தருமாறு கிராம நிர்வாக அலுவலராக உள்ள மூங்கில் துரைபட்டு பகுதியைச் சேர்ந்த விஸ்வரங்கன் என்பவரை பன்னீர் செல்வம் நேரில் அணுகியுள்ளார். அதற்கு ‘3000 ரூபாய் லஞ்சம் தர வேண்டும். அப்படிக் கொடுத்தால் உமது பெயருக்குப் பட்டா மாற்றித் தருவதற்கு ஏற்பாடு செய்யப்படும்’ என்று கிராம நிர்வாக அலுவலர் விஸ்வரங்கன் பன்னீர்செல்வத்திடம் கூறியுள்ளார்.
இதையடுத்து பன்னீர்செல்வம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை மற்றும் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். அவரது புகாரின்பேரில் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி யுவராஜ் தலைமையிலான போலீசார் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை பன்னீர்செல்வத்திடம் கொடுத்து அதைக் கிராம நிர்வாக அலுவலர் விஸ்வரங்கனிடம் கொடுக்குமாறு கூறியுள்ளனர். அதேபோன்று பன்னீர்செல்வம் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திற்குச் சென்று, நிர்வாக அலுவலரிடம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கொடுத்து அனுப்பிய பணத்தை லஞ்சமாக கொடுத்துள்ளார்.
அங்கு ஏற்கனவே மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கிராம நிர்வாக அலுவலர் விஸ்வரங்கனை கையும் களவுமாகப் பிடித்து கைது செய்தனர். இதுகுறித்து அவர் மீது வழக்குப் பதிவுசெய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.