விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக அதிகார பலம், பண பலத்தால் வென்றிருந்தாலும், திமுகவின் வாக்கு சதவிகிதம் குறைந்திருக்கிறது. ரெட்டியார், தேவேந்திரகுல வேளாளர், நாயக்கர், தேவர், நாடார் என பலதரப்பட்ட சமூகத்தை சேர்ந்த மக்கள் வசிக்கும் இந்த தொகுதியில், அதிமுக வேட்பாளர் சின்னப்பன் 70 ஆயிரம் வாக்குகள் வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஜெயக்குமார் 41,042 வாக்குகள் பெற்றுள்ளார். கடந்த தேர்தலை காட்டிலும் இந்தமுறை திமுகவுக்கு 10 ஆயிரம் ஓட்டுக்கள் குறைவு ஆகும். ஏனெனில் 2016 தேர்தலில் திமுக வேட்பாளர் பீமராஜ் 54,778 வாக்குகள் பெற்றார்.
அதேநேரத்தில் அதிமுக கடந்த தேர்தலை போலவே இந்த தேர்தலிலும் தனது ஓட்டுக்களை தக்க வைத்திருக்கிறது. கடந்தமுறை அதிமுக உமா மகேஷ்வரி (இப்போது அமமுக) 71,496 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இப்போதும் அதே அளவு ஓட்டுக்களை சின்னப்பன் வாங்கி இருக்கிறார். இத்தனைக்கும் சீட் கிடைக்காத மாஜி எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் சுயேட்சையாக களம் இறங்கி 27 ஆயிரம் வாக்குகள் பெற்றிருக்கிறார்.
அதேபோல் அமமுகவின் ஜோதிமணியும் 9 ஆயிரம் வாக்குகள் பெற்றிருக்கிறார். அதிமுக, திமுக, சுயேட்சை மார்க்கண்டேயன் ஆகிய மூவரும் ரெட்டியார் சமூகத்தை சேர்ந்தவர்கள். இந்நிலையில், இந்த தொகுதியில் நாயக்கர் சமூகத்தினரிடம் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசி அதிமுகவுக்கு வாக்குகளை மடைமாற்றி விட்டதாக சொல்லப்படுகிறது.
ரெட்டியார் சமூகத்தை சேர்ந்த மார்க்கண்டேயனுக்கும், நாயக்கர் சமூகத்தை சேர்ந்த கடம்பூர் ராஜூவுக்கும் இடையே முட்டல் மோதல் இருந்தது. அதனால், தனது சமூக மக்களிடம் பேசி கடம்பூர் ராஜூ அதில் வெற்றி பெற்றதாகவும் சொல்லப்படுகிறது. திமுக கூட்டணியில் மதிமுக அங்கம் வகித்தாலும், நாயக்கர் சமூகத்தை ஓட்டுக்களை அதிமுக முழுமையாக அறுவடை செய்துவிட்டது.
திமுகவை பொறுத்தவரை பிரச்சாரமும் சரியாக செய்யவில்லை. செலவும் செய்யவில்லை. இதுவே இருந்த ஓட்டுக்களை இழந்ததற்கு காரணம் என பரவலாக பேச்சு அடிபடுகிறது. ஆக மொத்தத்தில் திமுக சுய பரிசோதனை செய்துகொள்வது அவசியம். இதனிடையே, சுயேட்சையாக நின்று 27 ஆயிரம் வாக்குகளை பெற்று 3-வது இடம் பிடித்த மார்க்கண்டேயனை, மீண்டும் அதிமுகவில் சேர்க்க கட்சித் தலைமை முடிவு செய்துள்ளதாகவும், இதற்கு கடம்பூர் ராஜூ முட்டுக்கட்டையாக இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.