தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின், மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சியில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அச்சங்கத்தின் மாநிலத் தலைவராக விக்கிரமராஜா மற்றும் மாநிலப் பொதுச் செயலாளராக கோவிந்தராஜூலு ஆகியோர் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விக்கிரமராஜா, “கரோனா கால கட்டத்தில், வியாபாரிகள் தமிழக அரசிற்குப் பெருமளவிற்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளனர். காந்தி மார்க்கெட் விவகாரத்தில், தனி நபர் ஒருவர் வழக்குத் தொடர்ந்திருப்பதால், காந்தி மார்கெட் மீண்டும் திறக்கப்படாமல் உள்ளது. தமிழக அரசு தலையிட்டு, வழக்கை முடிவுக்குக் கொண்டுவந்து வியாபாரிகளுக்குச் சாதகமான தீர்ப்பு ஏற்பட வழிவகை செய்ய வேண்டும்.
காந்தி மார்க்கெட்டை திறக்க வலியுறுத்தி, இன்று மாலை முதல் திருச்சியில் உள்ள காய்கறி பழ மார்க்கெட்டுகள், முழுமையாக அடைக்கப்பட்டு, போராட்டம் நடைபெறவுள்ளது. தமிழகம் முழுவதும் கடையடைப்பில் ஈடுபட, தமிழக வியாபாரிகள் தயார் நிலையில் உள்ளதைக் கருத்தில்கொண்டு, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கரோனா காலத்தில் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த வியாபாரிகளுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். ஆன்லைன் வர்த்தகத்திற்குத் தடை விதிக்க வேண்டும். 'ஸ்மார்ட் சிட்டி' என்ற பெயரில், கடைகளை அப்புறப்படுத்தக்கூடாது. அப்படி அப்புறப்படுத்தினால், திட்டப்பணிகள் முடிவடைந்தவுடன் மீண்டும் அதே பகுதிகளில் கடைகளை ஒதுக்க வேண்டும்.
காந்தி மார்க்கெட் தொடர்பான வழக்கில், நீதிமன்றத் தீர்ப்பு வியாபாரிகளுக்குச் சாதகமாக வராத பட்சத்தில் தமிழகம் முழுதும் வியாபாரிகள் போராட்டம் நடத்துவோம். கடையடைப்பு போராட்டத்தால், வியாபாரிகளுக்கும் பொது மக்களுக்கும்தான் பாதிப்பு. எனவே அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
இந்தக் கூட்டத்தில் மருத்துவப் படிப்பில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு அளித்ததற்கு வரவேற்பு அளிப்பது, தேசிய நெடுஞ்சாலையில் உள்ள காலக்கெடு முடிந்த சுங்கச் சாவடிகளை அகற்றிட வேண்டும், வேளாண் விளை பொருட்களை அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலிலிருந்து நீக்கியதற்கு எதிர்ப்பு உள்ளிட்ட 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.