'காங்கிரஸை எதிர்க்கட்சி அந்தஸ்து கூட இல்லாமல் காணாமல் போகின்ற லெவலில் ஆக்கி வைத்திருக்கிறார்கள்' என பாஜகவில் இணைந்த விஜயதரணி தெரிவித்துள்ளார்.
அண்மையில் காங்கிரஸில் இருந்து பிரிந்து பாஜகவில் இணைந்த விஜயதரணி கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ''என்னை என்னவேண்டும் என்றாலும் விமர்சனம் பண்ணட்டும். பெட்ரோமாக்ஸ் லைட், ஃபியூஸ் போன பல்பு என விமர்சனம் செய்கிறார்கள். அப்படியாக இருந்தால் என்னை எதற்கு இவ்வளவு மீடியாக்கள் கேள்வி கேட்கிறார்கள். சூப்பராக எரியும் எல்.இ.டி லைட் என்பதால் தான் இவ்வளவு மீடியா என் முன் நிற்கிறார்கள் என்பதை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும் அவர்கள்.
முதலில் கட்சியை வளர்த்தி காண்பிக்கவும். நானும் சந்தோஷப்படுகிறேன். எதிர்க்கட்சி அந்தஸ்து கூட இல்லாமல் காணாமல் போகின்ற லெவலில் ஆக்கி வைத்திருக்கிறார்கள். இது வருத்தமாக தான் இருக்கிறது. என்ன செய்ய, எதிர்க்கட்சி என ஒன்று இருக்க வேண்டும், அது கூட இல்லாத அளவிற்கு பண்ணி வைத்திருக்கிறார்கள், இதுபோன்று இருப்பவர்களை எல்லாம் துரத்திவிட்டு எவ்வளவு நாளைக்கு இதை செய்யப் போகிறார்கள், கட்சியை வளர்க்கும் பணிகளில் யூத் காங்கிரஸ் தம்பிகள் எல்லாம் ஈடுபடட்டும். நான் கூட வாழ்த்து சொல்கிறேன்.
37 வருஷம் கட்சிக்கு வேலை பார்த்து எனக்கு இவர்கள் செய்த துரோகம் அதிகம். பாஜகவிற்கு நான் போவதாக செய்தி வந்து இரண்டு வாரம் ஆகிறது. அந்த நிலையிலும் ப்ளோர் லீடர் தலைமையை எனக்கு கொடுக்காமல் இன்னொரு ஆளுக்கு கொடுத்திருக்கிறார்கள். ஒரு டைமில் எலக்சன் வைத்து பட்டியல் இனத்திற்கு தலைவர் பதவி கொடுக்கிறார்கள் என்பது மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் எனக்கு ஒரு பெண் என்பதனாலே கொடுக்க மறுத்து விட்டார்கள். இதுதான் நிலைப்பாடு. இதுதான் மனநிலை. கட்சியில் தவறு இருந்தால் தட்டிக் கேட்கும் இடத்தில் நான் இருந்திருக்கிறேன். இப்பொழுதும் என்னை நீங்கள் மாறுபட்ட ஆளாகப் பார்க்கக் கூடாது. தப்பு நடந்தால் தட்டிக் கேட்பேன் எங்கிருந்தாலும்'' என்றார்.