Skip to main content

“விஜயதரணி எம்.எல்.ஏ. பதவியை தகுதி நீக்கம் செய்க” - செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்

Published on 24/02/2024 | Edited on 24/02/2024
Vijayatharani MLA. Disqualify the position selvaperuthagai

கடந்த மூன்று முறை தொடர்ந்து விளவங்கோடு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வானவர் விஜயதாரணி. இவர் பா.ஜ.க.வில் இணையப் போவதாகத் தகவல்கள் வெளியாகியிருந்தன. இது காங்கிரஸ் கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

அதே சமயம் கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் விஜயதாரணி வெற்றி பெற்றபோது, சட்டமன்ற காங்கிரஸ் குழுத் தலைவர் பதவி கிடைக்கும் என எதிர்பார்த்துள்ளார். அந்த பதவியும் கிடைக்காமல் போன பிறகு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவி கிடைக்கும் என நினைத்துள்ளார். ஆனால் சமீபத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவி செல்வப்பெருந்தகைக்கு வழங்கப்பட்டது. அதே சமயம் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டும் கிடைக்காததால் விஜயதாரணி அதிருப்தியில் இருந்ததாகத் தகவல்கள் வெளியாகி இருந்தன. முன்னதாக அவர் டெல்லியில் முகாமிட்டிருந்த நிலையில், இன்று பிற்பகல் 2 மணியளவில் சுதாகர் ரெட்டி, மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், மத்திய இணை அமைச்சர் எல். முருகன் ஆகியோர் முன்னிலையில் விஜயதாரணி தன்னை பாஜகவில் இணைத்துக்கொண்டார்.

இந்நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் எஸ். விஜயதரணி இன்று (24.2.2024) புதுடெல்லியில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் பிற்பகல் 2 மணியளவில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவுக்கு அனுப்பி உள்ளார்.

Vijayatharani MLA. Disqualify the position selvaperuthagai

கட்சித் தாவல் தடைச் சட்டத்தின்படி ஒரு அரசியல் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அல்லது மாநிலங்களின் சட்டமன்ற உறுப்பினர்கள் தாங்கள் சார்ந்திருக்கும் கட்சியிலிருந்து விலகி வேறு அரசியல் கட்சிக்கு தாவினால் அவர்களின் பதவி பறிக்கப்பட்டு விடும் என்ற விதியின் அடிப்படையில் எஸ். விஜயதரணியினுடைய சட்டமன்ற உறுப்பினர் பதவியை உடனடியாக தகுதி நீக்கம் செய்து அறிவிக்குமாறு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் என்ற முறையில் சட்டப்பேரவை தலைவருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்