அ.தி.மு.க உடைந்தபோது இரு அணிகளும் இணைய வேண்டும் என்று பேட்டி கொடுத்துவிட்டு தினகரன் – எடப்பாடி அணிகளிடம் பேச்சுவார்த்தை நடத்திய அறந்தாங்கி அ.தி.மு.க. எம்.எல்.ஏ ரெத்தினசபாபதி பிறகு தினகரன் அணிக்கு சென்றார். அதனால் அவரது தொகுதியில் நடக்க இருந்த பல நலத்திட்டங்களும் முடக்கப்பட்டது. ஜெ. முதல்வராக இருந்த போது 110 விதியின் கீழ் அறிவித்த அம்பலவானேந்தல் அரசு ஆரம்பசுகாதார நிலையத்திற்கு நிதி ஒதுக்கியும் கூட பணிகளை செய்யவிடாமல் தடுத்து வைத்திருந்தனர்.
நாடாளுமன்ற தேர்தல் வரை அந்தப் பக்கம் இருந்தவர் 18 எம்.எல்.ஏக்கள் பதவி பறிக்கப்பட்டது சரி என்று தீர்ப்பு வந்த நிலையில் மீண்டும் அ.தி.மு.க விலேயே இணைந்தார். முதலமைச்சர் எடப்பாடியை அமைச்சர் விஜயபாஸ்கருடன் சென்று சந்தித்த பிறகு வெளியே வந்து.. தம்பி அமைச்சர் விஜயபாஸ்கர் என்னை அழைத்து வந்து இணைத்தார். நான் எப்போதும் அ.தி.மு.க காரன் தான். எனக்கு மக்கள் இரட்டை இலைக்கு தான் வாக்களித்தார்கள் என்றார்.
அதன் பிறகும் அவரது தொகுதிக்குள் மக்கள் நலப்பணிகள் நடந்ததாக தெரியவில்லை. கட்சியில் இணைந்தாலும் தொடர்ந்து ஒதுக்கி வைத்திருக்கிறார்களா என்ற கேள்வி ரெத்தினசபாபதி எம்.எல்.ஏ வின் ஆதரவாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அது உண்மை தான் என்பதை பறைசாற்றும் வகையில் ஒரு ஆடியோ வெளியாகி உள்ளது.
அமைச்சர் விஜயபாஸ்கரால் மணமேல்குடி அ.தி.மு.க ஒ.செ. வாக நியமிக்கப்பட்டுள்ள துரைமாணிக்கத்தின் ஆதரவாளரான ஓட்டுநர் பயிற்சி பள்ளி குமார் என்கிற அசோக்குமார் ஒரு டாஸ்மாக் ஊழியரிடம் செல்போனில் பேசும் அந்த ஆடியோவில்..
மணமேல்குடியில் உள்ள 2 டாஸ்மாக் கடைகளின் எண்களை கேட்கிறார். அந்த கடை எண்கள் என்று டாஸ்மாக் ஊழியர் 6651, 6701 என இரு கடைகளின் எண்களையும் சொல்கிறார். அதன் பிறகு அந்த கடைகளின் வாடகை, மற்றும் பார்க்கான தொகை எல்லாவற்றையும் கேட்டவர். அருகில் 7 கடைகளை உல்டா பண்ணி வரவிடாமல் தடுத்துவிடுவேன். அதனால நம்ம பார் நல்லா ஓடும் தானே என்றவர் அந்த ஒரு பாருக்கு மட்டும் ரூ. 35 ஆயிரம் வாடகை என்பதை கேட்டதும் அந்த கடை ஓனர்.......................... என்று தலித் என்பதால் அந்த ஜாதியை சொல்லி கண்டமேனிக்கு வசைபாடுகிறார்.
தொடர்ந்து இந்த கடைகளுக்கு எம்.எல்.ஏ விடம் சிலர் பேசி வருவதாக டாஸ்மாக் ஊழியர் சொல்ல.. யாரைப் பார்த்தா நமக்கு என்ன? அவருக்கு எந்த பவரும் இல்லை மணமேல்குடி ஒன்றியத்தில.. விஜயபாஸ்கர் (அமைச்சர் என்ற மரியாதை எந்த இடத்திலும் இல்லை ) போட்ட ஆள் ஒ.செ. துரைமாணிக்கம். அதனால் எதுனாலும் துரைமாணிக்கம் சொன்னா தான் நடக்கும். துரைமாணிக்கம் சொன்னா விஜயபாஸ்கர் கேட்பார்.
இப்ப கூட 2 கோடிக்கு வேலை வந்தது எம்.எல்.ஏ தரப்பில் அவுக தம்பி பெரியகருப்பன் பேர்ல போட்டாங்க. ஆனா துரைமாணிக்கத்துக்கு ஒதுக்கி கொடுத்துட்டாங்க. அடுத்து ரூ. 65 லட்சத்துல ஒரு பாலம் அதையும் துரைமாணிக்கம் எடுத்துட்டார். பவர் இப்படி இருக்கு.
எம்.எல்.ஏ வுக்கு பேரு கிடா.. வெட்டப்போற கிடானுதான் சொல்வாங்க. இந்த ஒன்றியத்துல எந்த பவரும் அவ... க்கு இல்லை. டாஸ்மாக் ஊழியர் ராமநாதன் இருக்கமாட்டார். 500 கையெழுத்து வாங்கி அவனை தூக்கிருவார் துரைமாணிக்கம். அவனை தூக்க முடியலன்னா ஒ.செ பதவியில இருக்க மாட்டார்.
இதையெல்லாம் செய்ய முடியலன்னா பதவி கொடுத்த ஆளுக்கு என்ன மரியாதை என்று சுமார் 10 நிமிடம் அந்த உரையாடல் தொடர்கிறது.
இந்த ஆடியோ வெளியான நிலையில் தலித் அமைப்பினர் தங்கள் இனத்தை இழிவாக பேசிய அசோக்குமார் மீது நடவடிக்கை எடு என்று மணமேல்குடி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.
அதே போல எம்.எல்.ஏ ரெத்தினசபாபதி தரப்பு அசோக்குமாரை தேடி வருகிறார்கள். அதனால் அசோக்குமார் யார் கண்ணிலும் படாமல் இருக்கிறார்.
அண்ணனை மறுபடியும் அமைச்சர் கட்சிக்கு கொண்டு வந்தார். ஆனால் பழையபடியே எல்லாம் நடக்குது. இது அவருக்கு தெரிஞ்சு நடக்குதா? தெரியாமல் நடக்குதா என்பது தெரியல. அவர் கவனத்திற்கும் கொண்டு போயாச்சு. நடவடிக்கை எடுப்பார்னு நம்புறோம் என்றனர் எம்.எல்.ஏ தரப்பினர்.
மேலும் பல ர.ர.க்கள்.. அமைச்சர் விஜயபாஸ்கர் கடந்த சில ஆண்டுகளில் புதிய நிர்வாகிகள் நியமனம் செய்த போது அறந்தாங்கி, மணமேல்குடி, ஒன்றியங்களில் 3 ஒ.செ.க்களையும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்களாக நியமனம் செய்திருக்கிறார். அடுத்து அறந்தாங்கி நகரத்திலும் அதே சமூகத்திற்கு கொடுங்கள் என்று சிலர் முன்னால் நிற்கிறார்கள். ஆனால் 3 வருடம் முன்பு இப்படி கொடுத்ததால் பல கிராமங்களில் அ.தி.மு.க வினர் கூட்டங்களை நடத்தி தீர்மானங்கள் நிறைவேற்றினார்கள். அப்போது இனி இப்படி ஒரு தவறு நடக்காது என்று சொன்னார். ஆனால் அவர் சொன்னது போல நடக்கல. அதனால மறுபடியும் கிராமங்கள் தோறும், கிளைக் கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றி கட்சி தலைமைக்கு அனுப்ப வேண்டியது தான் என்றனர்.