புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் 20 ஆம் தேதி 2000 காளைகள் கலந்து கொள்ள உள்ள ஜல்லிக்கட்டு போட்டியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கிவைக்கிறார்.
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த விதிக்கப்பட்ட தடைகளை உடைக்க மெரினா முதல் குக்கிராமங்கள் வரை திரண்டு நின்று இரவு பகலாக போராடி தடையை உடைத்தனர். இந்த நிலையில் நீதிமன்ற வழிகாட்டுதல்படியே ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்ற நிலையில் காளைகளுக்கும் வீரர்களுக்கும் தேவையான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய நிலையில் உள்ளனர் விழாக்குழுவினர்.
அத்தனை பாதுகாப்பு ஏற்பாடுகளோடு தமிழகத்தின் முதல் அனுமதிபெற்ற ஜல்லிக்கட்டு புதுக்கோட்டை மாவட்டம் தச்சன்குறிச்சியில் நடந்தது.
இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை 20 ஆம் தேதி 2000 காளைகள் கலந்து கொள்ள உள்ள ஜல்லிக்கட்டு போட்டியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கிவைக்கிறார். அமைச்சர் விஜயபாஸ்கர் ஏற்பாட்டில் 20 ந் தேதி விராலிமலையில் நடக்க உள்ள ஜல்லிக்கட்டு போட்டியானது சாதனையாக்கும் முயற்சியும் நடந்து வருகிறது. அதாவது தமிழகத்தில் அதிக காளைகளும் காளையர்களும் கலந்துகொண்ட பிரமாண்ட ஜல்லிக்கட்டு விராலிமலை ஜல்லிக்கட்டு என்றும் இதை அமைச்சர் விஜயபாஸ்கர் முன்னின்று சாதனை செய்தார் என்றும் பரவ வேண்டும் என்பதே நோக்கமாக உள்ளனர். மேலும் அமைச்சரின் புதிய காளை ஒன்று விராலிமலையில் களமிறக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஜல்லிக்கட்டு காளையை அடக்க களமிறங்கும் வீரர்கள் அனைவரும் காப்பீடு கட்டாயம் என்ற நிலையும் உருவாக்கப்பட்டுள்ளது.
அதாவது.. விராலிமலையில் 20.01.2019 நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு திருவிழாவிற்கு
முன்பதிவு செய்த மாடுபிடி வீரர்கள் தங்களது
ஆதார் அட்டை நகல்
, வங்கி அட்டை நகல்
(bank pass book xerox)
பாஸ்போர்ட் சைஸ் ஃபோட்டோ
இவை அனைத்தையும் 17.01.2019 முதல்
விராலிமலை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் கொடுத்து காப்பீட்டு திட்டத்திற்கு (Insurance) பதிவு செய்தால் மட்டுமே ஜல்லிக்கட்டு காளைகளை அடக்குவதற்கு அனுமதிக்கப் படுவார்கள் என்று
ஜல்லிக்கட்டு விழா குழுவினர் அறிவித்துள்ளனர்.
முழு காப்பீடு செய்யப்பட்ட வீரர்கள் மட்டுமே களமிறக்கப்பட்டனர் என்றும் சாதனைப் பட்டியலில் இடம் பெற உள்ளது. இதே போல அனைத்து ஊர்களிலும் காப்பீடு செய்தால் நல்லது என்கிறார்கள் மக்கள்.