Skip to main content

புனித நீருடன் நடந்த பூமி பூஜை;  நிகழ்வில் பங்கேற்காத தலைவர் விஜய்!

Published on 04/10/2024 | Edited on 04/10/2024
 Vijay did not participate in the puja for the first conference of T.V.K

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் கடந்த பிப்ரவரி மாதம், தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய அரசியல் கட்சியைத் தொடங்கினார். தீவிர அரசியலில் களமிறங்க உள்ள அவர், தனது கட்சி 2026 தமிழக சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் என்றும், கைவசம் இருக்கும் படங்களை முடித்துவிட்டு, திரைத்துறையில் இருந்து தான் விலக உள்ளதாகவும் அறிவித்திருந்தார். தற்போது அ.வினோத் இயக்கத்தில் ‘தளபதி 69’படத்தில் நடிக்க ஆயத்தமாகி வருகிறார். இந்த படத்தின் பணிகள் ஒரு பக்கம் விறுவிறுப்பாக சென்றுக்கொண்டிருக்கும் நிலையில், மறுபக்கம், தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாட்டுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

விழுப்புரம் அருகே விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை கிராமத்தில் வரும் அக்டோபர் 27 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டுக்கு பல கட்ட ஆலோசனைக்குப் பிறகு காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. இந்த மாநாட்டில் விஜய் தனது கட்சிக் கொடியின் அர்த்தத்தையும், கட்சியின் கொள்கை குறித்தும் அறிவிக்கவுள்ளார். இதன் காரணமாக இந்த மாநாடு கட்சி தொண்டர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், மாநாட்டில் பங்கேற்க வரும் தொண்டர்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல் மாநாட்டுக்கு ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் குறைந்தது 10 ஆயிரம் பேரை அழைத்து வர வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மாநாட்டுக்கு இன்னும் குறைவான நாட்களே உள்ளதால், அதற்கான பணிகளைத் தொடங்க, கட்சியின் சார்பில், வி.சாலை கிராமத்தில், பூமி பூஜை மற்றும் பந்தக்கால் நடும் விழா நடைபெற்றது. இன்று அதிகாலை 4.30 மணியளவில் தொடங்கிய இந்த நிகழ்ச்சி, கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடைபெற்றது. மேலும் செங்கல்பட்டு புகழ் பெற்ற கிறிஸ்தவ தேவாலயங்கள், மசூதிகள், கோவில்களில் இருந்து  சிறப்பு பூஜை செய்யப்பட்டு புனித நீரானதை எடுத்து வந்து மாநாட்டுத் திடலில் உள்ள பந்தக் காலில் ஊற்றினர்.

 Vijay did not participate in the puja for the first conference of T.V.K

புதுச்சேரியில் அங்காளம்மன் கோவிலில் பூஜை செய்யும் அச்சகர்கள் இந்த பந்தக்கால் விழாவில் சிறப்பு அச்சர்களாக இருந்தனர். இந்த விழாவில் அனைத்து மாவட்டச் செயலாளர்கள் கலந்து கொண்டனர். சுமார் 3000 பேர் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் தலைவர் விஜய் பங்கேற்கவில்லை. மேளதாளத்துடன் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தொண்டர்கள் பலரும் பங்கேற்றிருந்தனர். ஆயிரக்கணக்கான தொண்டர்கள், மகளிர் அணிகள் வந்திருந்ததால், அங்குக் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது.

மேலும் குழந்தைகள் பெண்கள், என ஏராளமானோர் வந்திருந்ததால், காவல்துறை பாதுகாப்பு அளிக்கப்பட்டது. முதல் அரசியல் மாநாட்டுக்கான பூமி பூஜை தலைவர் விஜய் இல்லாமல் நடந்துள்ளது அக்கட்சியினரிடையே சற்று சோகத்தை ஏற்படுத்தி இருந்தாலும் பூமி பூஜை சிறப்பாக நடந்து குறித்து மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர். நாளை முதல் மாநாட்டுப் பணிகள் துவங்க உள்ளது.

சார்ந்த செய்திகள்