அரியலூர் மாவட்டம், ஏரவாங்குடியில் கடந்த 2017-ம் ஆண்டு ஜூன் 12ஆம் தேதி கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் ஜான் பீட்டர் என்பவர், தன் நிலத்துக்கு பட்டா வழங்கும்படி கிராம நிர்வாக அலுவலர் வேல்முருகனிடம் கோரிக்கை வைத்தபோது, பட்டா வழங்க ஆயிரம் ரூபாய் லஞ்மாக கேட்டதாக கூறப்படுகிறது.
அவ்வளவு தொகை கொடுக்க முடியவில்லை என ஜான்பீட்டர் கூறிய நிலையில், 500 ரூபாய் மட்டும் லஞ்சமாக கொடுத்ததாகவும், அதுபோதாது என வி.ஏ.ஓ. பேரம் பேசியது தொடர்பான வீடியோ வாட்ஸ்அப்பில் வெளியானது. பின்னர் வேல்முருகனை பணியிடை நீக்கம் செய்து வட்டார வருவாய் அதிகாரி உத்தரவிட்டார். ஆனால், லஞ்ச ஒழிப்பு காவல்துறையிடம் புகார் அளிக்காததால் கோரைக்குழி நாகமுத்து என்பவர் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர், அரியலூர் ஆய்வாளர் உள்ளிட்டோருக்கு டிசம்பர் மாதம் 25ஆம் தேதி புகார் செய்துள்ளார்.
அதில், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ. வேல்முருகன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும், அதேநேரம் லஞ்சம் வாங்கும் வீடியோ காட்சியுடன் மனுதாரர் கொடுத்த புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறைவினரும் தனியாக வழக்குப்பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.