1970களில் விவசாய பம்புசெட்டுகளுக்கான மின் கட்டணத்தில் ஒரு பைசாவை தமிழக அரசு உயர்த்தியது. இந்த இரண்டு பைசா உயர்வால் ஆத்திரமடைந்த விவசாயிகள், நாடு முழுவதும் போராட்டம் நடத்தினர். போராட்டம் எல்லை மீறிச் செல்லவே காவல்துறை தடுக்க முயன்றது. ஆனால், எவ்வளவோ முயன்றும் காவல்துறையால் அந்த போராட்டத்தைக் கட்டுப்படுத்த இயலவில்லை. பின்னர், தங்களது ஒவ்வொரு அஸ்திரத்தையும் காவல்துறை ஏவியது. அப்போதும் விவசாயிகளின் போராட்டம் கட்டுக்குள் வரவில்லை.
இதனால் தடியடி, துப்பாக்கிச்சூடு என்று அடக்குமுறைகளைக் கையாண்டது காவல்துறை. இதில், பரிதாபமாக மூன்று விவசாயிகள் கொல்லப்பட்டனர். அன்றைய ஒருங்கிணைந்த கோயம்புத்தூர் மாவட்டத்திலும் இன்றைய திருப்பூர் மாவட்டத்திலும் உள்ள பெருமாநல்லூர் பகுதியில்தான் ஆயக்கவுண்டர், மாரப்ப கவுண்டர், ராமசாமி என்னும் மூன்று இளம் விவசாயிகள் போலீசாரின் துப்பாக்கிச் சூட்டிற்கு பலியாகினர். விவசாயிகள் பலியானதை சற்றும் எதிர்பார்க்காத அரசு, இரண்டு பைசா விலைவாசி உயர்வைத் திரும்பப் பெற்றுக் கொண்டது.
விவசாயிகளின் உரிமைக்காகப் போராடி உயிர் நீத்த தியாகிகள் நினைவிடம் பெருமாநல்லூர் - ஈரோடு சாலையில் அமைக்கப்பட்டது. ஆண்டுதோறும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் விவசாய சங்கத் தலைவர்களும் இங்கு வந்து நினைவு தினம் அனுசரித்துச் செல்வது வழக்கம். இந்த நிலையில், உயிர் நீத்த விவசாயத் தியாகிகளின் 54வது நினைவு தினம் சமீபத்தில் அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் பங்கேற்ற தமிழ்நாடு மாநில பாஜக தலைவர், தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தினார்.
அப்போது அஞ்சலி செலுத்திய பின்னர், பாஜக தலைவர் அண்ணாமலை ஆதரவாளர்கள் மத்தியில் பேசினார். அவர் தீவிரமாகப் பேசிக் கொண்டிருக்கும்போதே அவரது மைக் கனெக்ஷன் தடைப்பட்டது. பின்னர், மின்சாரமும் தடைப்பட்டது. இதனால் அதிருப்தியடைந்த பாஜகவினர், திடீரென சாலை மறியலில் அமர்ந்தனர். இதனால், பெருமாநல்லூர் - ஈரோடு சாலையில் பெருமளவு, வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் வழிநெடுக காத்துக் கிடக்க வேண்டிய அவலநிலை ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பாஜகவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, அங்கு வந்திருந்த பெண் போலீசாரை சூழ்ந்துகொண்ட பாஜகவினர், அவர்களை மிரட்டும் தொனியில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் மீண்டும் பரபரப்பு பற்றிக் கொண்டது. திமுககாரர் போடும் நிகழ்வுகளில் கரண்ட் கட் ஆவதில்லை எனவும் பாஜக தலைவர் அண்ணாமலை வரும்போது மட்டும் எப்படி கரண்ட் கட் செய்யப்படுகிறது எனவும் அடுத்தடுத்து கேள்விகளை எழுப்பினர். மேலும், இது பழைய பாஜக இல்ல மேடம். இது அண்ணாமலை பாஜக. என குரலை உயர்த்தி சத்தமாக பேச, சுற்றியிருந்த பாஜகவினர் கைதட்டி கரவொலி எழுப்பினர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், அண்ணாமலை நேரம் கடந்தும் பேசியதால் அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக கூறுகின்றனர். இதனால் அப்பகுதியே பரபரப்பாக காணப்பட்டது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.