நடிகர் விஜய்யின் 'வாரிசு' படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், வரும் பொங்கல் பண்டிகைக்கு இப்படம் வெளியாக உள்ளது. இப்படத்திற்கான வெளியீட்டு உரிமை தொடர்பாக, பிரபல நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தைத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில், சென்னை பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்கத்தின் அலுவலகத்தில் சேலம், நாமக்கல், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகளையும், ரசிகர்களையும் சந்தித்துப் பேசினார். இந்த நிகழ்வின் போது, அகில இந்திய விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உடனிருந்தார். பின்னர், அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.
இதனைத்தொடர்ந்து விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், ''விஜய் அவரது ரசிகர்களை சந்தித்து போட்டோ சூட் எடுத்திருக்கிறார். இனிவரும் காலங்களில் அவருக்கு எப்பொழுது ஃப்ரீ டைம் இருக்குதோ மீண்டும் ரசிகர்களை சந்தித்து அடிக்கடி போட்டோ சூட் எடுப்பதாக சொல்லி இருக்கிறார். ரொம்ப நாள் கழித்து இந்த போட்டோ சூட் எடுக்கப்பட்டுள்ளது. மாவட்ட தலைவர்கள் எல்லாம் விஜய்யை சந்திக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர். அதன்படி இன்று மாவட்ட தலைவர், அணி தலைவர், ஒன்றிய, நகர ரசிகர்கள், தொண்டர்களை சந்தித்தார். சேலம், நாமக்கல் கிழக்கு, நாமக்கல் மேற்கு மாவட்டம், காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகளை இன்று சந்தித்தார். மிக விரைவில் மற்ற மாவட்ட நிர்வாகிகளை சந்திப்பார்'' என்றார்.