“புதிய தேசிய கல்விக் கொள்கை 2019”க்கான வரைவு குறித்து விவாதிப்பதற்காக சென்னை பெரியார் திடலில் 2019 ஜூன் 14 அன்று திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் சார்பாக, அதன் புரவலர் ஆசிரியர் கி.வீரமணி தலைமையில் கல்வியாளர்கள் பங்கேற்ற கலந்துரையாடல் ஆய்வுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் வருமாறு:
1. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எட்டாம் அட்டவணையில் உள்ள அனைத்து மொழிகளிலும் இந்த புதிய தேசிய கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கையை மொழிபெயர்த்து மத்திய அரசே அதிகாரப்பூர்வமாக வெளியிட வேண்டும்.
2. புதிய தேசிய கல்விக் கொள்கை குறித்து மக்கள் கருத்து தெரிவிப்பதற்கான கால அவகாசம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட வேண்டும்.
3. தமிழக அரசு சட்டமன்றத்தைக் கூட்டி புதிய தேசிய கல்விக் கொள்கைக்கான வரைவு குறித்து விவாதிக்க வேண்டும்.
4. மத்திய அரசு கூட்டியிருக்கும் மாநில கல்வி அமைச்சர்கள் மாநாட்டுக்கு முன்னதாகவே, உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, இவ் வரைவு குறித்த அனைவரின் கருத்துகளையும் தமிழ்நாடு அரசு கேட்க வேண்டும்.
5. தமிழ்நாட்டின் பள்ளிக்கல்வி, உயர்கல்வி, தொழில்நுட்பக் கல்வி என பல துறைகளிலும் உள்ள கல்வியாளர்களை அழைத்து, இந்த வரைவு அறிக்கை பற்றிய மிக விரிவான விவாதம் நடத்தப்பட வேண்டும்.
6. இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராக, மாநில உரிமையைப் பறிக்கக் கூடிய, இடஒதுக்கீடு உள்ளிட்ட சமூகநீதிக்கு எதிரான, கல்வியை முழுமையாக வணிக மயமாக்குகின்ற இந்த புதிய தேசிய கல்விக் கொள்கை திரும்பப்பெறப்பட வேண்டும்.
7. இந்திய பன்முகப் பண்பாட்டிற்கு எதிரான இந்தி-சமஸ்கிருதத் திணிப்பு, ஒற்றைக் கல்விமுறை, ஒற்றைப் பண்பாட்டைத் திணிக்கும் இந்த புதிய தேசியக் கல்விக் கொள்கைக்கான வரைவு முழுமையாக திரும்பப்பெறப்பட வேண்டும்.
கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்றோர்:
1. கி.வீரமணி, புரவலர், திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம்
2. முனைவர் அ.இராமசாமி, மேனாள் துணைத் தலைவர், தமிழ்நாடு உயர்கல்வி மன்றம்
3. முனைவர் மு.நாகநாதன், மேனாள் துணைத் தலைவர், மாநிலத் திட்டக் குழு, தமிழ்நாடு அரசு
4. முனைவர் ம.இராசேந்திரன், மேனாள் துணைவேந்தர், தமிழ்ப் பல்கலைக் கழகம்
5. முனைவர் உரு.இராசேந்திரன், மேனாள் முதல்வர், அ.வி.வா.நி.திரு புட்பம் கல்லூரி, பூண்டி
6. முனைவர் ஆ.இராமச்சந்திரன், மேனாள் இயக்குநர், அண்ணா பல்கலைக்கழகம், சென்னை
7. முனைவர் அ.கருணானந்தன், மேனாள் வரலாற்றுத் துறைத் தலைவர், விவேகானந்தா கல்லூரி, சென்னை.
மேனாள் ஆட்சிக் குழு உறுப்பினர், சென்னைப் பல்கலைக்கழகம் மற்றும் திருவள்ளுவர் பல்கலைக்கழகம், வேலூர்
8. முனைவர் நம்.சீனிவாசன், மேனாள் தமிழ்த் துறைத் தலைவர், மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி, பசுமலை, மதுரை
9. டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத், மேனாள் ஆட்சிமன்றக் குழு உறுப்பினர், சென்னைப் பல்கலைக்கழகம், பொதுச் செயலாளர், சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்.
10. முனைவர் ஆ.தானப்பன், இணைச் செயலாளர், திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம், மேனாள் இணைப் பேராசிரியர், வரலாற்றுத் துறை, மாநிலக் கல்லூரி, சென்னை.
11. பேராசிரியர் ச.மனோகரன், உதவிப் பேராசிரியர், வரலாற்றுத் துறை, நந்தனம் ஆடவர் அரசுக் கல்லூரி, சென்னை.
12. முனைவர் சி.முருகன், பொதுச் செயலாளர், MUTA, சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை.
13. பு.பா.பிரின்ஸ் கஜேந்திர பாபு, பொதுச் செயலாளர், பொதுப் பள்ளிக்கான மாநில மேடை.