சேலம் பெரிய கொல்லப்பட்டியைச் சேர்ந்தவர் கருணாநிதி (45). முடி திருத்தும் தொழிலாளியான இவர், அதே பகுதியில் சொந்தமாக கடை நடத்தி வந்தார். இவருடைய மகள் விஜி (18 பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர், கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அன்னதானப்பட்டியைச் சேர்ந்த மோகன்லால் (25) என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார்.
மகளின் காதல் மற்றும் திருமணத்தை ஆரம்பத்தில் இருந்தே கருணாநிதி கண்டித்து வந்தார். அதேநேரம், விஜியின் காதலுக்கு அன்னதானப்பட்டியில் வசிக்கும் அவருடைய சித்தியும், பாஜக மாவட்ட மகளிர் அணி செயற்குழு உறுப்பினருமான சாந்தியின் ஆதரவு இருந்துள்ளது. அவர்தான் முன்னின்று விஜிக்கு காதலனுடன் திருமணத்தை நடத்தி வைத்ததாகச் சொல்லப்படுகிறது.
இதையறிந்த கருணாநிதி, தனது அண்ணி சாந்தியிடம் அடிக்கடி தகராற்றில் ஈடுபட்டு வந்துள்ளார். கடந்த ஆண்டு செப். 17ம் தேதி அண்ணி சாந்தியுடன் கருணாநிதி தகராற்றில் ஈடுபட்டுள்ளார். அப்போது அவர், சாந்தியை கத்தியால் கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் கருணாநிதியை அன்னதானப்பட்டி காவல்துறையினர் கைது செய்தனர். சிறையில் அடைக்கப்பட்டு இருந்த அவர், கடந்த 3ம் தேதி பிணையில் வெளியே வந்தார்.
இந்நிலையில், ஜன. 30ம் தேதி மாலை கருணாநிதி, தனது மோட்டார் சைக்கிளில் கோரிமேடு வந்தார். அந்தப் பகுதியில் உள்ள கட்டுமானத் தொழிலாளர் சங்க அலுவலக கட்டடத்தின் மறைவான பகுதியில் நின்று மது குடித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு அரிவாளுடன் வந்த இளைஞர் ஒருவர், அவரை கழுத்தை அறுத்துவிட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பி ஓடிவிட்டார். சிறிது நேரத்தில் கருணாநிதி துடிதுடித்து உயிரிழந்தார். இந்த சம்பவத்தைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கிருந்த சிலர், கன்னங்குறிச்சி காவல்நிலையத்திற்குத் தகவல் அளித்தனர்.
காவல்துறையினர் நிகழ்விடம் விரைந்தனர். சடலத்தை மீட்டு, உடற்கூராய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நிகழ்விடம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்ததில் கொலையாளி யார் என்பது தெரிய வந்தது.
விசாரணையில், ஏற்கனவே கருணாநிதியால் கொல்லப்பட்ட சாந்தியின் மகன் விக்னேஷ்வரன் (20) என்பவர்தான் திட்டம் போட்டு, பழிக்குப்பழியாக சித்தப்பாவை கழுத்தை அறுத்துக் கொலை செய்திருப்பதும் தெரிய வந்தது.
விக்னேஷ்வரன் முதலில் அரிவாளால் தனது சித்தப்பா கருணாநிதியை கழுத்தில் வெட்டியுள்ளார். அவர் அங்கிருந்து தப்பித்தோம் பிழைத்தோம் என்று சிறிது தூரம் ஓடியுள்ளார். ரத்தம் அதிகமாக வெளியேறியதில் தடுமாறி கீழே விழுந்துள்ளார். அப்போது விக்னேஸ்வரன் கழுத்தை அரிவாளால் அறுத்துவிட்டு தப்பி ஓடியிருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதையடுத்து தலைமறைவான விக்னேஷ்வரனை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் கோரிமேடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.