ஜெயலலிதாவை மெரினாவில் அடக்கம் செய்யும் போது எந்த சட்டச் சிக்கலும் இல்லையா? என தமிழக வாழ்வுரிமை கட்சித்தலைவர் வேல்முருகன் ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
திமுக தலைவர் கலைஞர் உடலை அடக்கம் செய்ய மெரினாவில் இடமில்லை என தமிழக அரசு அனுமதி மறுப்பு தெரிவித்தது. இது தமிழகம் முழுவதும் உள்ள திமுக தொண்டர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளிலும் திமுக தொண்டர்கள் மெரினா வேண்டும் என்று முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இதுகுறித்து தமிழக வாழ்வுரிமை கட்சித்தலைவர் வேல்முருகன் நம்மிடம் கூறியதாவது,
ஏற்றுக்கொள்ளவே முடியாது, இவ்வளவு பெரிய தலைவர், 5 முறை முதல்வராக இருந்தவர். ஒரு பன்முகத்தன்மை கொண்ட மாபெரும் தலைவர். அவருக்கு மெரினாவில் இடமில்லை என்பதை ஒரு போதும் ஏற்றுக்கொள்ளவே முடியாது. கண்டிப்பாக மெரினாவில் அண்ணாவிற்கு அருகில் கலைஞருக்கு இடம் ஒதுக்கி தர வேண்டும்.
முதலமைச்சராக இருந்து கொண்டு மெரினாவில் கலைஞருக்கு அந்த இடத்தை தருவதன் மூலம் பெருமை கலைஞருக்கு அல்ல எடப்பாடி பழனிசாமிக்கு தான். இவ்வளவு பெரிய தலைவருக்கு, இவ்வளவு பெரிய ஒரு அரசியல் ஆளுமைக்கு, இந்திய அளவில் ஒரு மிகப்பெரிய தலைவனுக்கு தன்னுடைய காலத்தில், மெரினாவில் இடம் தருவதற்கான நல்வாய்ப்பு கிடைத்துள்ளது என்பதை காலமெல்லாம் எண்ணி பெருமைப்பட வேண்டும்.
இப்போது சட்டச் சிக்கல் இருக்கிறது என சொல்லும் தலைமைச் செயலாளர், ஜெயலலிதாவை அடக்கம் செய்யும் போது எந்த சட்டச் சிக்கலும் இல்லையா? எப்படி அப்போது எம்.ஜி.ஆர் சமாதிக்குள் வைத்தனர்? அப்போது அந்த சட்டச் சிக்கல் எங்கே போனது?
அதனால், திராவிடர் முன்னேற்ற கழகமும், செயல்தலைவரும் நீதிமன்றத்தில் நாடியாவது திமுக தொண்டர்களை திரட்டி கண்டிப்பாக கலைஞரின் உடல் பேரறிஞர் அண்ணா நினைவிடம் அருகில் தான் வைக்க வேண்டும். அதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை. இதற்காக தமிழக வாழ்வுரிமை கட்சியும் தனது குரலை ஓங்கி பதிவு செய்யும் என அவர் கூறியுள்ளார்.