வேலூர் மாவட்டம், கலவை அருகே உள்ள இருகூர் பகுதியைச் சேர்ந்தவர் ரங்கநாதன். இவருக்கு மனைவி, ஒரு மகன், இரு மகள்கள் உள்ளனர். கூலித் தொழில் செய்து குடும்பத்தை நடத்திவருகிறார். மே 28ந் தேதி இரவு, வீட்டில் இருந்த ரங்கநாதனுக்கு போன் மூலம் அழைப்பு வந்துள்ளது. உடனே வீட்டில் இருந்து கிளம்பி சென்றுள்ளார். எங்கு செல்கிறீர்கள் என அவர் மனைவி கேட்டபோது, கூட்டாளி ஒருத்தன் அழைக்கிறான் போய்ட்டு வந்துடறன் எனச்சொல்லி சென்றுள்ளார். இரவு நீண்ட நேரமாகியும் வெளியே சென்ற கணவர் வராததால் அவரது செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டுள்ளார். அந்த எண்ணுக்கு அழைப்பு போகவில்லை.
இதற்கிடையே மே 29ந் தேதி, மேல்நெல்லி கிராமம் அருகே உள்ள சுடுகாட்டு போகும் வழியில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ஒருவர் இறந்து கிடப்பதாக அவ்வழியே சென்ற ஒருவர், காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளார். அதன் அடிப்படையில் கலவை காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மே 29ந் தேதி காலையில் மேல்நெல்லி பகுதியில் இருந்த ரங்கநாதன் குடும்பத்துக்கு தெரிந்தவர்கள் அவர் குடும்பத்துக்கு ரங்கநாதனை யாரோ கொலை செய்து உடலை போட்டுள்ளார்கள் என்று தகவல் கூறியுள்ளனர். அதனைக்கேட்டு அதிர்ந்துப்போய் ரங்கநாதன் மனைவி மற்றும் தாயார் சம்பவ இடத்துக்கு வந்து பார்த்து கதறி அழுதனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக ராணிப்பேட்டை டி.எஸ்.பி கலைச்செல்வன் நேரில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். இந்த கொலை சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு காணப்பட்டது.