கடந்த மூன்று ஆண்டுகளாக புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கும், நாராயணசாமி தலைமையிலான அரசுக்கும் அதிகார போட்டி நடந்து வருகிறது. அதிகாரத்தை மீறி அரசு நிர்வாகத்தில் கிரண்பேடி தலையிடுவதாக குற்றம் சாட்டி முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள் மற்றும் கூட்டணி கட்சியினர் கடந்த பிப்ரவரி மாதம் ஆளுநர் மாளிகை முன் தொடர் போராட்டம் நடத்தினர். பின்னர் கிரண்பேடியின் சமரச பேச்சுவார்த்தைக்கு பிறகு போராட்டம் கைவிடப்பட்டது. ஆனால் அப்போதே நாராயணசாமி, 'போராட்டம் தற்காலிகமாக கைவிடப்படுகிறது’, தேவைப்பட்டால் மீண்டும் போராடுவோம்' என கூறினார்.
இந்நிலையில் புதுச்சேரி மாநிலத்தின் அன்றாட அரசு அலுவல்களில் தலையிட, ஆய்வு செய்ய ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என முதல்வரின் பாராளுமன்ற செயலாளர் லஷ்மி நாராயணன் எம்.எல்.ஏ தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தன. ஆனால் மத்திய உள்துறை அமைச்சகம் மூலம் கிரண்பேடி உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். அதில் அதிகாரிகளை முதலமைச்சர் மிரட்டுவதாக குறிப்பிட்டுள்ளார்.
அதையடுத்து நேற்று நடந்த முன்னாள் முதல்வர் வெங்கடசுப்பா ரெட்டியார் நினைவு நாள் நிகழ்ச்சியில் பேசிய நாராயணசாமி, “ நாம் கவர்னருக்கு எதிராக தொடர்ந்து சட்ட போராட்டம் நடத்த வேண்டிய சூழலில் உள்ளோம். கவர்னருக்கு எதிராக நாம் பல வழக்குகள் தொடுத்து வெற்றி கண்டுள்ளோம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு அதிகாரமா… நியமிக்கப்பட்டவருக்கு அதிகாரம் உள்ளதா என தொடரப்பட்ட வழக்கில், மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்கே அதிகாரம் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
கிரண்பேடி டில்லியில் 10 நாட்களாக தங்கி, இந்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தார். அதில் இடைக்கால தடை விதிக்க நீதிமன்றம் மறுத்து விட்டது. அதே நேரத்தில் வரும் 7-ஆம் தேதி நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் நிதி, நிலம் தொடர்பாக எந்த முடிவும் எடுக்க கூடாது. முடிவெடுத்தாலும், வரும் 21-ஆம் தேதிக்கு பிறகே அமல்படுத்த வேண்டும். நீதிமன்ற அவமதிப்பு வழக்கு யார் மீதும் போடக்கூடாது எனவும், என்னை மனுதாரராக சேர்க்கும்படியும் நீதிமன்ற உத்தரவில் கூறப்பட்டுள்ளது. கவர்னர் தொடர்ந்து நமக்கு தொல்லை கொடுப்பதை நிறுத்தவில்லை. இதனால் மாநில வளர்ச்சிக்கு தடை ஏற்பட்டது. கவர்னரை எதிர்த்து ஆறு நாட்கள் போராடினோம். மீண்டும் அவரை எதிர்த்து தொடர் போராட்டம் நடத்த வேண்டிய சூழலில் உள்ளோம்” என அறைகூவல் விடுத்துள்ளார்.
அதேசமயம், சமூக வலைதளம் மூலம் முதல்வர் நாராயணசாமிக்கு பதிலடி கொடுத்துள்ள கிரண்பேடி, 'எனக்கு எதிராக போராட்டம் நடத்த காங்கிரஸ் கட்சியினர் தயாராக இருக்க வேண்டும் என முதல்வர் நாராயணசாமி பேசியுள்ளார். கவர்னரின் உரிமையை அவர் எப்படி நிராகரிக்க முடியும்? இது நீதியை தடுக்கும் வகையில் உள்ளது. எனக்கு எதிராக போராட்டம் நடத்த தூண்டுவது உண்மையிலேயே வருந்தத் தக்கது. அவர் ஒரு உள்துறை அமைச்சர். சட்டத்திற்கு எதிராக அவர் எப்படி செயல்படலாம். இது நீதியை தடுப்பதாகும்' என குறிப்பிட்டுள்ளார்.