வேலூர் மாவட்டம் வாணியம்பாடி சந்தை மைதானத்தில் ரம்ஜானை முன்னிட்டு ரங்கராட்டினம் போன்ற விளையாட்டு உபகரணங்களை கொண்டு அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் வாணியம்பாடி மட்டுமல்லாமல் பல பகுதிகளை சேர்ந்த குழந்தைகள் தங்களது பெற்றோர்கள், நண்பர்களுடன் வந்து அங்கு விளையாடிவிட்டு சென்றுள்ளனர்.
![c](http://image.nakkheeran.in/cdn/farfuture/nkb2IESPk0EVENYDc28tpbX6h3DIus30L2Ebh-27T4Q/1559970164/sites/default/files/inline-images/chil.jpg)
இந்நிலையில் ஜீன் 7ந்தேதி மாலை ரங்கராட்டினத்தில் வாணியம்பாடியை சேர்ந்த விஷ்ணு என்கிற 10 ஆம் வகுப்பு படிக்கும் சிறுவன் ஏறி உட்கார்ந்துள்ளான். அவன் தனது கைகளை வெளிப்புறமாக போட்டு பந்தாவாக உட்கார்ந்துள்ளான். அப்போது ராட்டினம் சுற்றி வரும்போது அவனது கை ராட்டினத்தின் சக்கரத்தில் சிக்கியதால் கீழே இழுத்து தள்ளியுள்ளது.
அங்கு முதலுதவி மையம் இல்லாததால் அவனை உடனடியாக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்துள்ளனர். அங்கு சிகிச்சை அளித்தும் இறந்துள்ளான் விஷ்ணு. இது தொடர்பாக வாணியம்பாடி நகர போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுப்போன்ற விளையாட்டு மைதானங்களில் தனியார் விளையாட்டு நிகழ்ச்சிகளை நடத்தும்போது, முதலுதவி மையம் இருக்க வேண்டும், பாதுகாப்பு சாதனங்கள் இருக்கிறதா என்பதை அதிகாரிகள் ஆய்வு செய்து அனுமதி வழங்க வேண்டும் என பல கட்டுப்பாடுகள் இருந்தும் அந்த உத்தரவுகளை காற்றில் பறக்க விட்டுள்ளதாக குற்றம் சாட்டுகின்றனர் அங்கு விளையாட தங்களது பிள்ளைகளை அழைத்து சென்று வந்த பெற்றோர்கள்.
அதிகாரிகள் லஞ்சம் வாங்கிக்கொண்டு அதனை கண்டுக்கொள்ளாமல் விட்டது ஒரு சிறுவனின் உயிரை பலி வாங்கியுள்ளது.