வேலூர் மாவட்டம் ஆம்பூர் புறவழிச்சாலை பகுதியில் அரசின் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையின் தினசரி வருமானம் சுமார் 7 லட்சம் முதல் 9 லட்சம் வரை இருக்கும் என்கின்றனர். இந்நிலையில் இதே பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியில் இரண்டு கடைகளில் டாஸ்மாக் பெயர் பலகை வைத்து மது பாட்டில்களை விற்பனை செய்து வந்துள்ளனர். இங்கிருந்து பெட்டி பெட்டியாக சரக்குகளை எடுத்து செல்வதும், சில நேரங்களில் குடிகாரர்களுக்கு தருவது என செயல்பட்டு வந்துள்ளனர்.
இதனால் அதிருப்தியான அப்பகுதி மக்கள் அந்த கடைக்கு எதிராக போராட்டம் நடத்தினர். தகவலறிந்து வந்த ஆம்பூர் நகர காவல் துறையினர் சம்பவ இடத்தில் உள்ள இரண்டு கடைகளை திறந்து சோதனை செய்த போது டாஸ்மாக் சரக்குகள் பெட்டி பெட்டியாக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து டாஸ்மாக் உயர் அதிகாரிகளுக்கு காவல்துறையினர் அளித்த தகவலின் பேரில் அங்கு வந்த கலால் ஆணையர் பூங்கொடி சம்பவ இடத்தில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த டாஸ்மாக் சரக்குகளைப் பற்றி விசாரணை மேற்கொண்டார். அப்போது, இந்த பகுதியில் சில கிராமங்களில் போலியாக டாஸ்மாக் பெயர் பலகை வைத்து கடைகள் செயல்படுவதும். அங்கு விற்பனை செய்ய இங்கிருந்து சரக்குகள் அனுப்பி வைக்கப்பட்டது வருவதும் அறிந்து அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.
அதோடு, ராஜா என்பவரிடம் கடைகளை வாடகைக்கு எடுத்து சரக்குகளை இறக்கி வைத்து விற்பனை செய்தது டாஸ்மாக் கடைகளில் பணியாற்றும் ஊழியர்கள் தான் என தெரிய வர அதிகாரிகள் அதிர்ச்சியாகினர். அவர்கள் யார், யார் என அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.