கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 60க்கு மேற்பட்ட விவகாரம் தமிழ்நாட்டை தாண்டி இந்தியளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் தீவிரமாக காவல்துறையினர் கண்காணித்து வருகின்றனர். அவ்வப்போது அதிரடி சோதனைகள் நடத்தி கள்ளச்சாராய ஊரல்களையும் அழித்து வருகின்றனர்.
அந்த வகையில் கள்ளச்சாராயத்தை ஒழிக்க வேலூர் மாவட்டத்தில் காவல் துறையினர் தொடர் ரோந்து மற்றும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மாவட்டத்தில் தற்போது கள்ளச்சாராயம் கட்டுக்குள் வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் வெல்லம் விற்கும் விவசாயிகள் யாருக்கு வெல்லம் விற்கிறோம் என்று கவனமுடன் விற்க வேண்டும் என்று மாவட்ட எஸ்.பி.மதிவாணன் அறிவுறுத்தியுள்ளார்.
அதில், கள்ளச்சாராயம் காய்ச்ச தேவைப்படும் மூலப்பொருட்களில் ஒன்றான வெல்லத்தை வேலூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் கவனத்துடன் விற்பனை செய்ய வேண்டும். தவறான நபர்களின் கைகளில் அது சேரக்கூடாது. இது குறித்து அல்லேரி, பீஞ்சமந்தை, சாத்கர் உள்ளிட்ட மலை பகுதிகளைச் சுற்றியுள்ள விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம் எனத் தெரிவித்துள்ளார்.