வேலூர் மக்களவை தேர்தலுக்கான இறுதிக்கட்ட பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. திமுக வேட்பாளர் கதிர்ஆனந்த்துக்காக திமுக தலைவர் ஸ்டாலின் உட்பட ஒட்டுமொத்த திமுக நிர்வாகிகளும் வேலூரில் முகாமிட்டுள்ளனர். அதேபோல் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகத்துக்காக, தமிழக அமைச்சரவையோடு சேர்த்து 209 தேர்தல் பொறுப்பாளர்கள் தொகுதியில் உள்ளனர்.
வேலூர் தொகுதியில் 14 லட்சத்து 25 ஆயிரம் பேர் வாக்களிக்க தகுதியானவர்கள் ஆவர். இஸ்லாமிய வாக்குகளை குறிவைத்தே வேலூர் மாவட்டம், இராணிப்பேட்டையை சேர்ந்த முகமதுஜான்னை மாநிலங்களவை எம்.பியாக்கியது அதிமுக. அவரும், தன் சமுதாய மக்களிடம், தொழிலபதிர்களிடம், ஜமாத் நிர்வாகிகளை தனித்தனியாக, குழுவாக சந்தித்து இஸ்லாமிய மக்கள் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்து வருகிறார்.
அதிமுகவை தொடர்ந்து இஸ்லாமிய வாக்குகளை பெற திமுகவும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. திமுகவின் பொருளாளரும் வேலூர் மாவட்ட மூத்த அரசியல் தலைவருமான துரைமுருகன் ஆரம்பம் முதலே இஸ்லாமிய முக்கிய பிரமுர்களை சந்தித்த படியே இருந்தார். ஆம்பூர் தொகுதி பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள முன்னால் அமைச்சர் எ.வ.வேலு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.
ஆம்பூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள தோல் தொழிற்சாலையில் பெரியதும், பிரபலமானதுமான பரிதாபாத் தோல் தொழிற்சாலை நிறுவனங்கள் உள்ளனர். இந்த குழும நிறுவனத்தில் மட்டும் சுமார் 10 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். அங்கு இஸ்லாமியர்கள் மட்டுமல்லாமல் பெரும்பான்மையாக இந்து மதத்தை சேர்ந்த தொழிலாளர்களும் பணியாற்றுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆம்பூரில் உள்ள பரிதாபாத் தொழிற்சாலையில் ஆகஸ்ட் 1- ஆம் தேதி காலை திமுக தலைவர் ஸ்டாலின் கட்சி நிர்வாகிகளுடன் சென்று அங்குள்ள தொழிலாளர்களை சந்தித்து திமுகவுக்கு வாக்களியுங்கள் எனக்கேட்டு வாக்கு சேகரித்தார்.