வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் களத்தில் அதிமுக சின்னத்தில் ஏ.சி.சண்முகமும், திமுக சார்பில் கதிர்ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி என மொத்தம் 28 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். ஒவ்வொரு வாக்குபதிவு மையத்திலும் இரண்டு வாக்கு இயந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளன.
வாக்குபதிவு வரும் ஆகஸ்ட் 5ந்தேதி நடைபெறவுள்ளது. இதற்கான தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஒவ்வொரு கட்சி தலைமையும் ஈடுப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான கட்சி பிரமுகர்கள் தொகுதியில் முகாமிட்டு தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் 14 லட்சத்துக்கு 24 ஆயிரம் சொச்ச வாக்குகள் உள்ளன. தேர்தல் பணியில் 7552 பேர் ஈடுப்பட்டுகின்றனர். இதில் 1086 வாக்குகள் தபால் வாக்குகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்த வாக்குகள் தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள ஊர்க்காவல் படையினர், தீயணைப்பு துறையினர், காவல்துறையினரின் வாக்குகளாகும். அந்த தபால் வாக்குகளுக்கான வாக்குப்பதிவு ஜீலை 29ந்தேதி காலை வேலூர் நேதாஜி விளையாட்டரங்கில் தொடங்கியது. நூற்றுக்கணக்கானவர்கள் வந்து தபால் வாக்குக்கான படிவத்தை வாங்கி வாக்குப்பதிவு செய்து சீல் வைத்த கவரில் ஒப்படைத்துவிட்டும் சென்றனர்.
இதனை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான சண்முகசுந்தரம் தலைமையில் அதிகாரிகள் சென்று ஆய்வு செய்தனர். தபால் வாக்குபதிவு 100 சதவிதம் நடைபெறவேண்டும் என அதிகாரிகள் முடிவு செய்து அதற்கான விழிப்புணர்வு பிரச்சாரத்தை அரசு ஊழியர்களிடம் செய்தனர்.
நாடாளுமன்ற தேர்தலின்போது தமிழகத்தில் உள்ள 38 தொகுதியிலும் அரசு ஊழியர்களின் வாக்குகள் திமுக கூட்டணிக்கு சாதகமாகவே விழுந்ததாகவே வாக்கு எண்ணிக்கை வெளிப்படுத்தின. வேலூர் தொகுதி தபால் வாக்குகள் யாருக்கு சாதகமாக இருக்கும் என கணிக்க முடியாததால் இரண்டு பிரதான கட்சிகளின் தேர்தல் பொறுப்பாளர்களும் பதட்டத்தில் உள்ளனர்.