இதுநாள் வரை தமிழக அரசியலில் ஆளும் கட்சியின் உயர் பொறுப்பில் உள்ள முதல்வர், அமைச்சர், எம்.எல்.ஏக்கள் ஆகியோர் தான் தமிழகத்தை ஆய்வு செய்து கொண்டிருந்தனர். ஆனால் சமீப காலமாக புதிய திருப்பமாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பல்கலைகழகங்களுக்கு பட்டமளிப்பு விழாவிற்கு கலந்து கொள்ளும் போது, அப்படியே மாநில அரசின் நிர்வாகம் சம்மந்தப்பட்ட, தூய்மை இந்தியா திட்டப்பணிகள் எப்படி செயல்படுகிறது என்றும் ஆய்வு செய்து சரிவர பணி செய்யாத அதிகாரிகளை கண்டிக்கவும் செய்கிறார்.
இது மாதிரியான செயல் மாநில அரசின் உரிமைகளை பாதிக்கும் செயல் என்று தி.மு.க. உள்ளிட்ட எதிர்கட்சிகள் தங்களின் கண்டணத்தை பதிவு செய்தது. இதில் தி.மு.க. மட்டும் ஒருபடி மேலே போய் ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வண்ணம் கருப்புக்கொடி காட்டி தங்கள் கண்டனத்தை பதிவு செய்து வருகிறார்கள். அந்த வரிசையில் திருச்சியில் வரும் பிப்ரவரி 21ம் தேதி தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆய்வு செய்ய உள்ளார்.
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கும் ஆளுநர் திருச்சி செல்கிறார். இதனையடுத்து தூய்மை இந்தியா திட்டத்தின் பணிகளை திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் உள்ளிட்ட இடங்களில் ஆய்வு செய்ய உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த முறை தஞ்சாவூர் பகுதிக்கு செல்லும் ஆளுநர் செல்லும் போது, திருச்சிக்கு வந்த அவரை திருச்சி எம்.பி.சிவா வரவேற்ற போது தி.மு.க. கட்சிக்குள் விமர்சனத்தை உண்டாக்கியது.
இந்நிலையில் தற்போது, திருச்சி வரும் ஆளுநருக்கு வலுமையான எதிர்ப்பை காண்பிப்பதற்காக தி.மு.க. தலைமையுடன் திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
- ஜெ.டி.ஆர்