![corona](http://image.nakkheeran.in/cdn/farfuture/wnVBYyoiEONy1NbHP3kCiOuRdTJsFTrae-NHVB9s_8I/1593155794/sites/default/files/inline-images/corona%2045_0.jpg)
ஆசியாவில் மிகப் பிரபலமான மருத்துவமனை வேலூர் கிருஸ்த்தவ மருத்துவக் கல்லூரி (C.M.C). இந்தக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் ஆயிரக்கணக்கான பேர் பணியாற்றுகிறார்கள். தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, வடஇந்தியாவைச் சேர்ந்த பலர் மருத்துவர்களாக, மருத்துவம் பயில்பவர்களாக, செவிலியர்களாக, ஆய்வகப் பணியாளர்களாக, உதவியாளர்களாக உள்ளனர்.
தன்னாட்சி அதிகாரம் பெற்ற இந்த மருத்துவமனை கல்லூரியில் இந்தியாவின் பல பகுதிகளில் இருந்து சிகிச்சைக்காக நோயாளிகள் வருவார்கள். கரோனா ஊரடங்கு தொடங்கிய மார்ச் மாதம் தொடக்கத்திலேயே வழக்கமாக வரும் நோயாளிகள் வந்துகொண்டு தான் இருந்தனர்.
இந்நிலையில் சி.எம்.சி.-யில் பணியாற்றும் நூற்றுக்கணக்கானவர்கள் அதாவது மருத்துவர்கள், செவிலியர்கள், அலுவலகப் பணியாளர்கள் என பலருக்கும் கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது எனக் கூறப்படுகிறது. ஜீன் 23ஆம் தேதி சி.எம்.சி. மருத்துவமனை இயக்குநர், கண்காணிப்பாளர் அலுவலங்கள் மூடப்பட்டது. கரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு டெஸ்ட் எடுக்கப்பட்டு தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளார்கள் எனக் கூறப்படுகிறது.
இதில் அதிகாரபூர்வமாக மருத்துவமனையின் முக்கிய நிர்வாகிக்குக் கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்கிறது மாவட்ட நிர்வாகம். அந்த முக்கிய நிர்வாகியின் பெயர் கரோனா பாதிக்கப்பட்டவர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியலில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து அவரது அலுவலகத்தில் பணியாற்றியவர்கள், அவரை தினசரி சந்தித்த துறைத் தலைவர்கள், ஊழியர்கள் என அனைவருக்கும் பரிசோதனை நடத்தப்பட்டு அதில் பலருக்கு பாசிட்டிவ் என ரிசல்ட் வந்து அவர்கள் அதே மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவது கூறப்படுகிறது.