வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் கடந்த ஆகஸ்ட் 5ந்தேதி வாக்குபதிவு நடைபெற்று ஆகஸ்ட் 9ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிந்தது. இந்த தேர்தலுக்கான அறிவிப்பு கடந்த ஜீலை மாதம் அறிவிக்கப்பட்டது. தேர்தலை முன்னிட்டு வேலூர் காவல் சரகத்தில் உள்ள வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் பணிபுரிந்து வந்த காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மாவட்டங்களுக்கிடையே பணியிடம் மாறுதல் செய்யப்பட்டனர்.
மக்களவை தேர்தல், வாக்கு எண்ணிக்கை, தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிந்தும் மாவட்டங்களுக்கு இடையே பணியிடம் மாறுதல் போடப்பட்டவர்களுக்கு மீண்டும் சொந்த மாவட்டங்களுக்கு பணியிடம் வழங்கப்படாமல் உள்ளது. இதனால் ஆய்வாளர் முதல் உதவி ஆய்வாளர் வரை தங்களுக்கு எப்போது பணியிடம் மாறுதல் வழங்கப்பார்த்து வருகின்றனர்.
தேர்தல் முடிந்ததும் எப்போதும் போல் இடமாறுதல் செய்யப்பட்டவர்கள் மீண்டும் பழைய இடத்தில் நியமிக்கப்படுவார்கள். இந்த வழக்கமான நடைமுறையால் குடும்பத்தை இடமாற்றம் செய்யமாட்டோம். நாங்கள் மட்டும் எங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் இருந்து பணியை செய்து வருவோம். இப்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிந்துள்ளன. ஆனால், இன்னமும் எங்களுக்கான இடமாறுதல் வழங்கவில்லை. இதனால் குடும்பத்தாரை சந்திக்க முடியாமல் பெரும் மன உளைச்சலில் உள்ளோம் என்கிறார்கள்.
இதுப்பற்றி அதிகாரிகள் வட்டாரத்தில் பேசியபோது, தேர்தலின்போது இடமாறுதல் வழங்குவது பின்னர் பழைய இடத்துக்கே மாறுதல் வழங்குவது வாடிக்கை தான். ஆனால் அது சட்டமோ, கட்டாயமோ கிடையாது. மனிதாபிமானத்தில் செய்வது. மனிதாபிமானத்தை உரிமை போல் கேட்கிறார்கள். சில நாட்கள் பொருத்துக்கொண்டால் தானாகவே நடக்கும் என்கிறார்கள்.