அரிச்சல் முனைப் பகுதியில் வாகனங்கள் சென்று திரும்பும் கிழக்குப் பகுதியிலுள்ள சாலையின் சுற்றுச்சுவர் கடல் சீற்றத்தால் இடிந்து விழும் நிலையில் இருப்பதால் சுற்றுலாப்பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் தீவின் விளிம்பிலுள்ளது வங்காள விரிகுடா மற்றும் இந்திய பெருங்கடல் ஆகியவை ஒன்றிணையும் அரிச்சல்முனை. இப்பகுதியில் தான் 1964 புயலால் அழிந்த தனுஷ்கோடியும் உள்ளது. மக்களால் ஆவி நகரம் என்றழைக்கப்படும் தனுஷ்கோடிக்கு தினசரி ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வதுண்டு. பாரம்பரியத்தைக் காக்கவும், சுற்றுலா மேம்பாட்டிற்காகவும் முகுந்திராயர் சாத்திரம் முதல் தனுஷ்கோடி அரிச்சல்முனை வரை சுமார் பத்து கிலோமீட்டர் தூரத்திற்கு 2016 ஆம் ஆண்டு 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக சாலை அமைக்கப்பட்டது. இதனையடுத்து சாலைகளை காக்க சாலையின் இரண்டு புறத்திலும் அரிச்சல்முனையிலிருந்து மூன்று கிலோ மீட்டர் தூரத்திற்கு பெரும் பாறைகளைக் கொண்டு தடுப்புகள் அமைக்கப்பட்டன. இந்நிலையில் கடந்த சில தினங்களாக தனுஷ்கோடி என் தென்கடல் பகுதி வழக்கத்திற்கு மாறாக கடல் சீற்றமாக இருந்துவரும் நிலையில் அரிச்சல்முனை பகுதியில் வாகனங்கள் சென்று திரும்பி வரும் கிழக்குப் பகுதி ஒருபுறம் சாலையின் சுற்றுச்சுவர் சேதமடைந்து கடலில் விழும் நிலையில் உள்ளது.இதனால் சுற்றுலா பயணிகளை கிழக்குப் புறம் உள்ள பாதையில் இறங்க பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு, வடக்குப் புறத்தில் உள்ள பாதையின் வழியாக மட்டுமே சுற்றுலா பயணிகளை சென்றுவர அனுமதித்துள்ளனர் போலீசார். சாலையின் சுற்றுச்சுவர் சரிந்து விழுந்தால் தனுஷ்கோடிக்கு செல்லும் வாகனங்கள் அனுமதிக்கப் படுவார்களா என்பது கேள்விக்குறியாக உள்ளது.