வேளாங்கண்ணி மாதா கோயில் திருவிழா
கொடியேற்றத்துடன் துவங்கியது
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு திருவிழா மாலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. இதில் பல லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டனர்.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி மாதா ஆலயம், வங்கக்கடல் அருகில், அமைதியான சூழலில் அமைந்துள்ளது. கிறிஸ்தவ ஆலயத்தின் மிக அரிதாக கிடைக்கக்கூடிய பசிலிக்கா என்ற பெருமைமிகு பிரம்மாண்ட கட்டிட அமைப்பில் கட்டப்பட்டுள்ள இந்தியாவின் ஐந்து கிறிஸ்தவ பேராலயங்களில் வேளாங்கண்ணி புனித மாதாகோயிலும் ஒன்று என்பது இதன் கூடுதல் சிறப்பு.
வேளாங்கண்ணி மாதாவின் பிறந்தநாள் செப்டம்பர் மாதம் 8-ந்தேதி வருகிறது. அந்த நாளையொட்டி வேளாங்கண்ணி பேராலயத்தில் 11 நாட்கள் திருவிழா கொண்டாடப்படுகிறது. இதன்படி இந்த ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
முன்னதாக மாதா உருவம் பொறித்த புனித வண்ணக்கொடி பேராலய முகப்பிலிருந்து ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு தேவாலய வளாகம், கடைத்தெருவழியாக, கடற்கரை சாலை, ஆரிய நாட்டு தெரு வழியாக மீண்டும் மணிக்கு பேராலயம் அருகில் உள்ள கொடி மேடைக்கு கொண்டு வரப்பட்டது.
தஞ்சை மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸால் கொடியை புனிதம் செய்ததும், பேராலயத்தின் வடக்கு புறத்தில் அமைக்கப்பட்டிருந்த 90 அடி உயர கொடி கம்பத்தில் ஏற்றப்பட்டது. கொடியேற்றத்தின் போது, அனைவரும் பிரார்த்தனை செய்தனர். கம்பத்தின் உச்சியை கொடி அடைந்ததும், மாதா உருவம் பொறிக்கப்பட்ட கலர் கலரான பலூன்களும், புறாக்களும் வானில் பறக்க விடப்பட்டன. அத்துடன், பேராலயத்தில் அலங்கரிக்கப்பட்டிருந்த அலங்கார விளக்குகள் அனைத்தும் ஒரே நேரத்தில் எரிந்தன.
கோயிலுக்கு பின்னால் வாண வேடிக்கைகள் நிகழ்த்தப்பட்டன.
அப்போது பேராலயத்தில் தமிழ், ஆங்கிலம், இந்தி, மராத்தி, கொங்கனி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் திருப்பலி நடைபெற்றது. கொடியேற்ற நாளில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக வேளாங்கண்ணிக்கு வந்து கொண்டே இருக்கின்றனர். விழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இன்று முதல் வரும் 8 ம்தேதி இரவு வரை வேளாங்கன்னி மாதா ஆலயத்தில் மக்கள் வெள்ளத்திற்கு பஞ்சம் இருக்காது. பக்தர்கள் போர்வையில் சமுக விரோதிகளும் நடமாடுவார்கள், திருட்டு, வழிபறி, ஏமாற்று வேலை, உள்ளிட்ட சமுக விரோத செயல்பாடுகளுக்கும் பஞ்சம் இருக்காது. 11 நாட்களும் பரபரப்பாகவே கானப்படும்.
- க.செல்வகுமார்