கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நடூர் கிராமத்தில் தடுப்பு சுவர் இடிந்து விழுந்து 17 பேர் பலியானா அந்த கொடூர நிகழ்வுக்கு உரிய விசாரணை வேண்டி போராடிய சில அமைப்புகளின் தலைவர்கள் அப்போது கைது செய்யப்பட்டனர். அப்படி கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யக்கோரி ஈரோடு காளைமாடு சிலை அருகே கடந்த 3ஆம் தேதி அருந்ததியின இளைஞர் பேரவை அமைப்பாளர் வடிவேல் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு போலீஸ் தடை விதித்தது. தடையை மீறி ஆர்பாட்டம் செய்த 11 பேரை போலீஸ் கைது செய்து, கோவை மத்திய சிறையில் அடைத்தது. பின்னர் அவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டதையடுத்து, நேற்று விடுதலையாகி வந்தனர்.

இந்நிலையில் 11 பேரும் அந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்காக இரண்டு கார்கள், இரண்டு மோட்டார் சைக்கிளி்ல் வந்தபோது, அந்த நான்கு வண்டிகளையும் போலீசார் பறிமுதல் செய்து வைத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை ஈரோடு போலீசார் திருப்பி தரவில்லை. இதனால் தங்களது வாகனங்களை திருப்பி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசனிடம் மனு கொடுத்தனர்.
பின்னர் "ஆர்பாட்டம், உண்னாவிரதம் போன்ற ஜனநாயக வழி போராட்டத்திற்கே ஈரோடு போலீஸ் தடை விதிக்கிறது. அப்படியும் போராட்டத்தில் ஈடுபட முயன்றால் எங்களைப் போல் கைது செய்து சிறையில் போடுகிறார்கள். நீதிமன்றம் சென்று வாதாடிதான் நாங்கள் பினையில் வெளிவந்தோம். இதில் எப்படிப் பார்த்தாலும் போராட்டம் நடத்த முற்பட்டது நாங்கள் தான் நாங்கள் கொண்டு வந்த வாகனம் எந்த சட்ட மீறலையும் செய்யவில்லை. ஆனால் அந்த வாகனங்களை எதற்காக பறிமுதல் செய்தார்கள் என்று தெரியவில்லை. இப்போது எங்கள் வாகனங்களை கேட்டு எஸ்.பி.யிடம் மனு கொடுத்துள்ளோம் அடுத்து சட்ட நடவடிக்கை எடுப்போம்" என்று தெரிவித்தனர்.