கரோனா வைரஸ் தாக்குதலால் ஊரடங்கு அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டாலும் கெடுபிடிகள் தளர்ந்து கடத்தல்கள் வழக்கம் போல் துவங்கிவிட்டது. அந்த வகையில் மயிலாடுதுறை அருகே திருவாலங்காடு சோதனைச் சாவடியில் காய்கறி அவசரம் என்கிற ஸ்டிக்கர் ஒட்டிய லாரி ஒன்று போதைப் பொருட்களோடு பிடிபட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தையும், தஞ்சை மாவட்டத்தையும் பிரிக்கும் எல்லையான திருவாலங்காடு சோதனைச் சாவடியில் போலீசார் வழக்கம்போல் சோதனை செய்துகொண்டிருந்தனர். விடியற்காலை மயிலாடுதுறையை நோக்கி "காய்கறி அவசரம்" என ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு அதிவேகமாக வந்த சரக்கு லாரியைத் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர் போலீசார். அந்த லாரியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருளான 60 மூட்டைகளும், ஒரு லட்சத்து 80 ஆயிரம் கான்ஸ் பாக்கெட்டுகளும் மூட்டை மூட்டையாகப் பதுக்கி வைத்து கடத்தி வரப்பட்டதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து லாரி ஓட்டுநரான மதுரை மேலூரைச் சேர்ந்தவரான பூரனஜோதியைக் கைது செய்து லாரி மற்றும் கடத்தல் பொருட்களைக் குத்தாலம் போலிஸாரிடம் ஒப்படைத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட ஹான்ஸ், புகையிலை மற்றும் லாரியின் மொத்த மதிப்பு சுமார் ஒரு கோடியைத் தாண்டும் என்கிறார்கள்.
இது குறித்து லாரி டிரைவர் பூரனஜோதி போலிஸாரிடம் கூறுகையில், "மதுரையில் தன்னை வாடகைக்கு அழைத்த நபர் சரக்கை ஏற்றி விட்டு விட்டு மயிலாடுதுறை சென்று அங்கே ஒரு செல்போன் எண்ணைத் தொடர்பு கொண்டால் அவர்கள் அதை இறக்கிக் கொள்வார்கள் என்று கூறி என்னை அனுப்பினார். மற்றபடி எனக்கு எதுவும் தெரியாது" என்று கூறியிருக்கிறான்.
இதையடுத்து பூரண ஜோதியைக் கைது செய்த போலீசார் மதுரையைச் சேர்ந்த மொத்த வியாபாரியான கார்த்திக் தீபக் மயிலாடுதுறையைச் சேர்ந்த டீலர் ஆனந்த், மயிலாடுதுறை மாங்கிலால் சேட்டு ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.