காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வீராணம் ஏரி மூலம் கடலூர் மாவட்ட காவிரி டெல்டா பகுதிகளான சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், புவனகிரி வட்டப் பகுதியில் 44 ஆயிரத்து 856 ஏக்கர் பாசனம் பெறுகிறது. இந்த ஏரியில் இருந்து தொடர்ந்து சென்னைக்கு குடிநீருக்காகத் தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. ஏரியின் முழுக் கொள்ளளவு 47.50 அடி ஆகும்.
தற்போது ஏரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த 3 நாட்களாகக் கனமழை பெய்து வருவதால் கீழணையில் இருந்து வடவாறு வழியாக ஏரிக்கு விநாடிக்கு 2 ஆயிரம் கன அடி தண்ணீரும், காட்டாறுகள் மூலம் விநாடிக்கு 200 கன அடி தண்ணீரும் ஏரிக்கு வந்து கொண்டிருக்கிறது. இதனால் ஏரியின் நீர் மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது. தற்போது ஏரியின் நீர் மட்டம் 45 அடியாக உள்ளது. சென்னைக்கு விநாடிக்கு 66 கன அடியும், விவசாயப் பாசனத்துக்கு விநாடிக்கு 25 கன அடியும் திறந்து விடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று (நவ.17) ஏரியின் பாதுகாப்பைக் கருதியும், வெள்ளத் தடுப்பு நடவடிக்கையாகவும் ஏரியின் வடிகால் மதகான வி.என்.எஸ்.எஸ். மதகு வழியாக விநாடிக்கு 2,200 கன அடி தண்ணீர் வெள்ளாற்றில் வெளியேற்றப்படுகிறது.
சிதம்பரம் பொதுப்பணித்துறைச் செயற்பொறியாளர் சாம்ராஜ் தலைமையில் உதவி செயற்பொறியாளர்கள் சிதம்பரம் பாலமுருகன், அணைக்கரை அருணகிரி மற்றும் உதவி பொறியாளர்கள், ஊழியர்கள் கொண்ட குழுவினர் தொடர்ந்து ஏரியின் கரைகளில் தீவிரக் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.