தூத்துக்குடியில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலையை விற்க வேதாந்தா நிறுவனம் முடிவெடுத்துள்ளது.
சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாகக் கூறி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்த ஆலையானது கடந்த 2018ஆம் ஆண்டு மே மாதம் மூடப்பட்டது. ஆலையைத் திறக்க அனுமதி கோரி வேதாந்தா நிர்வாகம் பல்வேறு முயற்சிகள் எடுத்து வந்த நிலையில், கரோனா பரவல் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் மட்டும் ஆக்ஸிஜன் உற்பத்திக்காக அனுமதி வழங்கப்பட்டது. அதன் பிறகு மீண்டும் மூடப்பட்ட ஆலையானது தற்போது வரை செயல்பாடின்றி உள்ளது.
இந்த நிலையில், ஆலையை விற்க முடிவு செய்துள்ள வேதாந்தா நிறுவனம் அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளதின்படி, மொத்த ஆலை வளாகமும் விற்பனை செய்யப்பட உள்ளதாகத் தெரிகிறது. ஆலையை வாங்க விருப்பமுள்ளவர்கள் ஜூலை 4ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கும்படி வேதாந்தா நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளாக ஆலையில் காப்பர் உற்பத்தி நிறுத்தப்பட்டு பெரும் நஷ்டத்தை சந்தித்ததால் இந்த முடிவை வேதாந்தா நிறுவனம் எடுத்துள்ளது.