18 குண்டு வெடிப்புச் சம்பவங்களில் ஆர்எஸ்எஸ்க்கு தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இன்று செய்தியாளர்களைச் சந்தித்த விசிக தலைவர் திருமாவளவன் பேசுகையில், “பாஜக என்பது வெளிப்படையாக இயங்கக்கூடிய ஒரு அரசியல் இயக்கம். தேர்தல் ஆணையத்தில் பதிவு பெற்ற ஒரு அரசியல் கட்சி. மக்களுக்குப் பதில் சொல்லக்கூடிய இடத்தில் பாஜக இருக்கிறது. வாக்கு வங்கியை நம்பி அது செயல்படுகிறது. ஆகவே பாஜகவிற்கு சில பொறுப்புகள் இருக்கிறது. சட்டப்பூர்வமாகப் பதில் சொல்லக்கூடிய இடத்தில் பாஜக இருக்கிறது. ஆனால் ஆர்எஸ்எஸ் பதிவு செய்யப்பட்ட இயக்கமாகவும் இல்லை. உறுப்பினர்களை அதிகாரப்பூர்வமாகக் கொண்டிருக்கக்கூடிய இயக்கமாகவும் இல்லை. பொறுப்பாளர்களை நியமிக்கக் கூடிய இயக்கமாகவும் இல்லை.
மாநில பொறுப்பாளர்கள் யார், மாவட்டப் பொறுப்பாளர்கள் யார், ஒன்றிய பொறுப்பாளர்கள் யார், என்ற உயர்நீதிமன்றத்தின் கேள்விக்கு அவர்களால் பட்டியலைத் தர முடியவில்லை. கிட்டத்தட்ட ஒரு தலைமறைவு பயங்கரவாத இயக்கத்தைப் போலச் செயல்படுகின்ற ஒரு இயக்கம், திரைமறைவில், இருட்டில் செயல்படுகின்ற ஒரு இயக்கமாகத்தான் ஆர்எஸ்எஸ் இருக்கிறது. எனவேதான் ஆர்எஸ்எஸ் இயக்கம் வெளிப்படையாக இப்படி கலாச்சாரத்தின் பெயரில் பேரணி நடத்துகிறோம், இயக்கம் நடத்துகிறோம் என்ற பெயரில் வன்முறையைத் தூண்டுவதற்கு, வெறுப்பு அரசியலை விதைப்பதற்கு மதத்தின் பெயரால், சாதியின் பெயரால், சமூகத்தைப் பிளவு செய்வதற்கு முயற்சி செய்கிறது. கடந்த காலங்களில் வட இந்திய மாநிலங்களில் இப்படிச் செய்திருக்கிறது. 18 குண்டு வெடிப்புச் சம்பவங்களில் ஆர்எஸ்எஸ்க்கு தொடர்பு இருக்கிறது என்று ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவர் சொல்லியிருக்கிறார். அவர்களுக்கு இருந்த தொடர்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதையெல்லாம் சான்றாக வைத்துத்தான் ஆர்எஸ்எஸ் பொது இயக்கமாக நடமாடக்கூடாது என்பது எங்கள் வலியுறுத்தலாக இருக்கிறது'' என்றார்.