![h.raja](http://image.nakkheeran.in/cdn/farfuture/ridbLeDi_druKFK4m_i9FmF_7L5aU0tMo0axeoL2ZVI/1544628980/sites/default/files/inline-images/h.raja%2081.jpg)
திருமாவளவன் தொட்ட கட்சியை மக்கள் தொட மாட்டார்கள் என்று தெரிந்து வைத்துள்ள பாஜக, எதற்காக அவரை எப்படியாவது தொட்டுவிட வேண்டும் என துடித்தது? எதற்காக தொடக்கூடாத திருமாவளவனுக்கு பதவி ஆசை காட்டி அவரது காலை நக்கியது? என எச்.ராஜாவுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மத்திய சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் ந.செல்லதுரை கேள்வி எழுப்பியுள்ளார்.
நிதானமிழந்த சனாதனம்! வெற்றிப்பாதையில்_ஜனநாயகம்! என்ற தலைப்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"திருமாவளவன் தொட்ட கட்சியை மக்கள் தொட மாட்டார்கள்" என்று பாஜக எச்.ராசா பேசியிருப்பது, மிகவும் மலிவான, தரம் தாழ்ந்த, ஜனநாயக விரோத, இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரான, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய பேச்சு.
எச்.ராசாவின் இந்த கீழ்த்தரமான பேச்சை விடுதலைச்சிறுத்தைகள் கட்சி மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறது. ஜனநாயகத்தை மதிக்காமல், மனுவின் கோட்பாட்டை மதித்து செயல்படும் சமூகவிரோதியான எச்.ராசாவை, தமிழகத்தின் எந்த மாவட்டங்களிலும் சுதந்திரமாக நடமாட விடமாட்டோம். ஜனநாயக ரீதியில் எங்களின் அனைத்து விதமான எதிர்ப்புகளையும் வெளிப்படுத்துவோம்.
ஆதிக்க புத்தி கொண்ட எச்.ராசாவால், எங்கள் தலைவரின் வளர்ச்சியையும், அவரது உறுதியான சனாதன எதிர்ப்பையும், மதவாத சக்திகளோடு சமரசம் செய்து கொள்ளாத அவரது நிலைப்பாட்டையும், தமிழகத்தில் சாதிவெறி சக்திகளை தனிமைப்படுத்தி, வெகுஜன மக்களின் ஆதரவைப் பெற்று நம்பிக்கை நாயகனாக பரிமாணம் பெற்று வருவதையும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவரால் இதை தடுக்க முடியாத நிலையில், என்ன செய்வது என்று தெரியாமல் தன்னுடைய நிதானத்தை இழந்து, இப்படி வாய்க்கு வந்தபடி பேசுகிறார்.
கடந்த பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக எங்கள் தலைவரை, பாஜக தங்களின் பக்கம் இழுத்துக் கொள்ள எத்தனை முயற்சிகள் எடுத்தது என்றும், தேர்தலில் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைத்த பிறகும் கூட, தமிழக பாஜகவைச் சார்ந்த மத்திய அமைச்சர் மூலம் தொடர்ந்து நடைபெற்ற பகீரத முயற்சிகள் பற்றியும் இந்த எச். ராசாவுக்கு எப்படி தெரியாமல் போனது?
திருமாவளவன் தொட்ட கட்சியை மக்கள் தொட மாட்டார்கள் என்று தெரிந்து வைத்துள்ள பாஜக, எதற்காக அவரை எப்படியாவது தொட்டுவிட வேண்டும் என துடித்தது? எதற்காக தொடக்கூடாத திருமாவளவனுக்கு பதவி ஆசை காட்டி அவரது காலை நக்கியது? எதற்காக அழையா விருந்தாளியாக அசோக் நகருக்கு வந்து பொன்னாடை போர்த்தி பல்லை இளித்தது? அப்போது கூட பக்குவமாக பதில் சொல்லி புன்னகையுடன் வழியனுப்பி வைத்தார் திருமாவளவன்.
எழுச்சித்தமிழர் மிகச்சிறந்த பண்பாளர். எச்.ராசா போல இழிபிறவி அல்ல. பாஜக தொட்டுவிடத் துடித்தது திருமாவளவனை. ஆனால் அவர் பாஜகவைத் தொடவில்லை. அதுதான் நிஜம். பாஜகவின் பாசிச கைகளுக்கு எட்டவில்லை என்றவுடன் சீச்சீ இந்தப் பழம் புளிக்கும் என்று பேசும் எச்.ராசாவே நினைத்தாலும் தொட முடியாத உயரத்தில் இருப்பவர் திருமாவளவன்.
எந்தக் காலத்திலும் தான் கொண்ட கொள்கையில் உறுதியாக இருப்பவர் அவர். சனாதன சக்திகளின் சதிகளை முறியடித்து புரட்சிகர ஜனநாயகத்தை வென்றெடுக்க சபதம் ஏற்றுள்ள மக்கள் தலைவர். எச்.ராசா நிதானத்தை இழந்து நிற்பதில் ஆச்சரியம் இல்லை. ஏனென்றால் பாஜக எனும் மதவாத சக்தி மக்கள் மன்றத்தில் தோல்வியைத் தழுவி வருகிறது.
தோற்பவன் நிதானத்தை இழப்பது நியாயம் தான். ஆனால் எழுச்சித்தமிழர் தனது பண்பட்ட நடவடிக்கைகளாலும் உயர்வான கொள்கைகளாலும் மக்கள் மன்றத்தில் வெற்றி பெற்று வருகிறார். நாளைய தலைமுறையை வழிநடத்த தகுதியான தலைவராக மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு வருகிறார். எனவே வெற்றிப் பாதையில் பயணிக்கும் எழுச்சித்தமிழர் நிதானம் இழக்க மாட்டார். அவரோடு பயணிக்கும் கொள்கைப்புரிதல் உள்ள அவரது தம்பிகள் நாங்களும் நிதானத்தை இழக்க மாட்டோம்.
ஆனால் ஜனநாயக விரோத, சமூகவிரோத நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிற எச்.ராசாவை ஜனநாயகம் அனுமதிக்கிற அனைத்து விதமான எதிர்ப்புகளின் மூலமும் நிலைகுலையச் செய்வோம். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை மதிப்போம். ஆதிக்த்தை வேரறுப்போம். சமத்துவத்தை நிலைநாட்டுவோம். எழுச்சித்தமிழர் வழிநடப்போம். இவ்வாறு கூறியுள்ளார்.