திமுக - விசிக இடையே நடைபெற்ற தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தையில், விசிகவிற்கு 6 தொகுதிகளை திமுக ஒதுக்கியுள்ளது. முன்னதாக 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், திமுக - விசிக கூட்டணியில், விசிகவிற்கு 2 இடங்கள் ஒதுக்கப்பட்டன. சிதம்பரம் தொகுதியில் திருமாவளவனும், விழுப்புரம் தொகுதியில் ரவிக்குமாரும் நின்று வெற்றிபெற்றனர். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலிலும் திமுக - விசிக கூட்டணி தொடர்ந்தது. வரும் தேர்தலில் விசிகவிற்கு அதிக இடங்கள் ஒதுக்கப்படும், குறிப்பாக இரட்டை இலக்கத்தில் தொகுதிகளைப் பெறுவோம் என அக்கட்சி நிர்வாகிகள் எதிர்பார்த்திருந்த நிலையில், 6 இடங்களே ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும், தனிச் சின்னத்தில் விசிக போட்டியிட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டப்பேரவை தேர்தலில் விசிக சார்பில் போட்டியிட விரும்புவோர் 06.03.2021 அன்று காலை முதல் மார்ச் 8 ஆம் தேதி மாலை 5 மணி வரை விருப்ப மனு அளிக்கலாம் என விசிக தலைமை அறிவித்திருந்தது. அதனையடுத்து நேற்று (11.03.2021) காலை 11 மணிக்கு சென்னையில் உள்ள விசிக தலைமை அலுவலகத்தில், விசிக சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடத்தினார் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன். இந்நிலையில் இன்று விசிக வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.