திருச்சி எடமலைப்பட்டிபுதூர் வடக்கு மேட்டு தெருவைச் சேர்ந்த கோபிநாத்(34) என்பவர், பாரதிதாசன் சாலை, ஆல் இந்திய ரேடியோ ஸ்டேஷன் அருகில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த ஒருவர் முகவரி கேட்பது போல நடித்து கோபிநாத்தின் கவனத்தைத் திசை திருப்பி அவரிடமிருந்த செல்போன் மற்றும் 500 ரூபாயை திருடியுள்ளார். இதனைக் கவனித்த கோபிநாத், திருடியவரை கையும் களவுமாக பிடித்துள்ளார். பின்னர் இதுகுறித்து ஷெசன்ஸ் கோர்ட் போலீஸ் ஸ்டேஷனில் கோபிநாத் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் அடிப்படையில் ஷெசன்ஸ் கோர்ட் காவல்துறையினர், திண்டுக்கல் மாவட்டம் பேகம்பூர் சவேரியார் பாளையத்தை சேர்ந்த இஸ்மாயில்(40) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து செல்போன் மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர். இஸ்மாயில் மீது ஏற்கனவே திண்டுக்கல், ஈரோடு, மதுரை, நீலகிரி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் 8 வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
திருச்சி ஓடத்துறை பகுதியைச் சேர்ந்த கௌதம்(34) என்பவர் தனது லோடு ஆட்டோவை நிறுத்திவிட்டு அதில் தூங்கிக்கொண்டிருந்தார். விழித்தெழுந்து பார்த்த பொழுது அவரின் செல்போன் திருடு போயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து காந்தி மார்க்கெட் குற்றப்பிரிவு போலீஸ் ஸ்டேஷனில் அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் நடத்திய விசாரணையில், வரகனேரி சாந்தாபுரத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் இந்த திருட்டில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காந்தி மஸ்கட் போலீசார் அவரை சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் சேர்த்தனர்.
திருச்சி ராம்ஜி நகர் மில் காலனி பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக எடமலைப்பட்டிபுதூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் அங்கு சென்று திடீர் சோதனை நடத்தியபோது கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மில் காலனி, மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த முத்துராமன்(45) என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 1.1 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட முத்துராமன் மீது வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.
திருச்சி புதுக்கோட்டை மெயின் ரோடு ஏர்போர்ட் பகுதியில் 65 மதிக்கத்தக்க முதியவரின் பிணம் கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்தத் தகவலின் அடிப்படையில், ஏர்போர்ட் போலீசார் அங்கு சென்று பிணத்தை கைப்பற்றி, யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல வரகனேரி பிச்சை நகர் பகுதியில் 45 மதிக்கத்தக்க ஆண் பிணம் ஒன்று கிடப்பதாக காந்தி மார்க்கெட் போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், போலீசார் பிணத்தை கைப்பற்றி யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.