திருவண்ணாமலை மாவட்டம் வன்னியர்குல ஷத்திரிய மடாலய சத்திரியர் சங்கத்துக்கு என திருவண்ணாமலை நகரில் இரண்டு திருமண மண்டபங்கள் உட்பட பல கோடி ரூபாய் மதிப்பில் சொத்துக்கள் உள்ளன. இந்த வன்னியர்குல சத்தியர் மடாலயத்தின் தலைவராக திமுக மாவட்ட அவைத் தலைவர் முன்னாள் எம்.பி வேணுகோபால் உள்ளார்.
இந்த மடாலய சங்கத்தின் சார்பில் திருவண்ணாமலை, கீழ்பெண்ணாத்தூர், செங்கம், கலசபாக்கம் தொகுதிகளில் அரசுப் பள்ளியில் பயிலும் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கும் விழா ஆகஸ்ட் 27 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஊக்கத்தொகை வழங்கி சிறப்புரை ஆற்ற திமுக தெற்கு மா.செ, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, வாழ்த்துரை துணை சபாநாயகர் பிச்சாண்டி என மடாலயத்திற்கு வருகை தர உள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கான அழைப்பிதழ் நோட்டீஸ் மாவட்டம் முழுவதும் அனுப்பியுள்ளனர் சங்கத்தினர். இந்த நோட்டீஸ் பார்த்துவிட்டு, சமூக ஊடகங்களில் கடந்த 3 நாட்களாக அமைச்சர் வேலுவுக்கு எதிராக கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறார் மடாலயத் தலைவர் வேணுகோபால்.
வன்னியர் சமுதாய நிகழ்ச்சிக்கு மாற்று சாதியைச் சேர்ந்த அமைச்சர் எ.வ. வேலு, பிச்சாண்டியை எப்படி அழைக்கலாம். திமுகவில் வன்னிய பிரமுகர்களே இல்லையா? அல்லது கட்சியைக் கடந்து வன்னிய பிரமுகர்கள் இல்லையா? பிற சாதி சங்கங்கள் நடத்தும் நிகழ்ச்சிகளுக்கு வன்னியர் தலைவர்களை, பிரமுகர்களை அழைத்துதான் நடத்துகிறார்களா என சமூக ஊடகங்களில் பல்வேறு கேள்விகளை எழுப்புகின்றனர்.
வன்னியர் மடாலய சங்க நிகழ்ச்சியில் அமைச்சர் வேலு கலந்துகொண்டால் அவருக்கு எதிராக வன்னியர் சங்கம், பாமக போன்றவை கறுப்புக் கொடி காட்டுவோம், நிகழ்ச்சி நடைபெறும் மடத்தின் முன்பு போராட்டம் நடத்துவோம் என நம்மிடம் தெரிவித்தனர் அதன் நிர்வாகிகளான பக்தவச்சலம், நாராயணன்.
இதுகுறித்து விளக்கம் பெற மடாலய தலைவர் முன்னாள் எம்.பி. வேணுகோபாலை தொடர்புகொண்டபோது, அவர் நமது லைனை எடுக்கவில்லை.
இதுபற்றி மடாலய நிர்வாகத்தில் உள்ளவர்களிடம் பேசியபோது, பரிசு வழங்குவதற்காக அமைச்சர் வேலுவை அழைக்கலாம் எனத் தன்னிச்சையாகவே முடிவு செய்தார் வேணுகோபால். இது தெரிய வந்தபோது சிலர், நம் சமுதாய மக்களிடம் எதிர்ப்பு வரும் எனச் சொன்னார்கள். அமைச்சரை அழைப்பதற்கு திமுக நிர்வாகிகளாகவும், மடாலயத்தில் பொறுப்பில் உள்ள சிலர் வெளிப்படையாக சொல்ல முடியாமல் மறைமுகமாகச் சொல்லியும் அதனை அவர் கண்டுகொள்ளவில்லை. இப்போது அழைப்பிதழ் நோட்டீஸ் எல்லா கிராமங்களுக்கும் சென்றபோது அங்கிருந்து எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது.
மடாலயத் தலைவராக உள்ள வேணுகோபால் திருவண்ணாமலை மாவட்ட திமுக அவைத் தலைவர். செயலாளராக உள்ள காளிதாஸ் பாமக நிர்வாகியாக உள்ளார். இப்படி சங்க பொறுப்புகளில் உள்ள சிலர் வெவ்வேறு கட்சிகளில் இருக்கின்றனர். இதில் அரசியல் கலக்கக்கூடாது. மடாலய சங்க விவகாரத்தில் கட்சியைக் கடந்து செயல்பட வேண்டும் என்றே முடிவு செய்யப்பட்டது. ஆனால் சங்கத்தில் மெஜாரிட்டியாக உள்ள திமுக பிரமுகர்கள் சிலர், மடாலயத்தை திமுக அலுவலகம் போலவே நடத்துகிறார்கள். இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால் தலைவரான வேணுகோபால் தனது சுயநலனுக்காக இதனைக் கண்டுகொள்ளாமல் ஆதரிக்கிறார். இதனைப் பார்த்து காங்கிரஸ் நிர்வாகியான முன்னாள் எம்.எல்.ஏ மணிவர்மா சங்க நிர்வாகத்தில் இருந்து ஒதுங்கிக் கொண்டார். செயலாளராக உள்ள காளிதாஸ் ஒதுங்குகிறார். இதையெல்லாம் சமுதாய மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். வன்னியர் மடாலய சொத்துக்களை கபளீகரம் செய்ய சிலர் களமிறங்கி உள்ளடி வேலை செய்கிறார்கள். இதற்கு அமைச்சரும் உடந்தையோ என எண்ணத் தோன்றுகிறது எதிர்ப்பு எழ அதுவும் ஒரு காரணம் என்கிறார்கள்.