புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தில் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.
இந்தச் சம்பவத்தில் டி.என்.ஏ. பரிசோதனை செய்ய இதுவரை 21 பேரிடம் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் சிபிசிஐடி காவல்துறையினர் கடந்த 10 ஆம் தேதி மனு ஒன்றைத் தாக்கல் செய்தனர். அதில் வேங்கைவயல் வழக்கு விவகாரம் தொடர்பாக இறையூர் கிராமத்தைச் சேர்ந்த 3 சிறுவர்கள், வேங்கைவயல் பகுதியைச் சேர்ந்த ஒரு சிறுவர் என 4 சிறுவர்களுக்கு டி.என்.ஏ. பரிசோதனை செய்ய அனுமதி வேண்டும் எனக் கேட்கப்பட்டு, அந்த வழக்கு விசாரணையில் இருந்து வருகிறது.
இதையடுத்து, இந்த வழக்கு விசாரணையின் போது நீதிபதி, புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 4 சிறுவர்களுக்கும் டி.என்.ஏ பரிசோதனை மேற்கொள்ள உத்தரவிட்டு இருந்தார். இந்நிலையில், இன்று காலை புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 4 சிறுவர்களும் வந்திருந்தனர். அதனைத் தொடர்ந்து 4 சிறுவர்களுக்கும் டி.என்.ஏ. பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.