தமிழகத்தில் இன்று ஒருநாள் கரோனா பாதிப்பு என்பது 14,013 ஆக பதிவாகியுள்ளது. நேற்று 16,096 ஆக பாதிப்பு பதிவான நிலையில் இன்றைய ஒருநாள் பாதிப்பு குறைந்துள்ளது. இந்த ஆண்டின் முதல் நாளான ஜனவரி ஒன்று கரோனா பாதிப்பு 1,489 ஆக இருந்தது. இன்று ஒரே நாளில் தமிழகத்தில் 1,31,258 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன.
சென்னையில் மட்டும் இன்று 2,054 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. நேற்று சென்னையில் கரோனா ஒருநாள் பாதிப்பு என்பது 2,348 என்று இருந்த நிலையில், இன்று குறைந்துள்ளது. இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி தமிழகத்தில் ஒரேநாளில் 37 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 37,636 ஆக அதிகரித்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள மிகப் பிரபல சுற்றுலா தளம் வண்டலூர் உயிரியல் பூங்கா. தமிழ்நாடு வனத்துறையின் சார்பில் பராமரிக்கப்பட்டு வரும் வண்டலூர் பூங்காவில் கடந்த ஜனவரி 15 ஆம் தேதி அன்று ஒரே நாளில் 70 ஊழியர்களுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதால் பூங்கா மூடப்பட்டது. தற்பொழுது தமிழகத்தில் கரோனா பாதிப்பு குறைந்து வருவதால் நாளை முதல் பூங்கா திறக்கப்படும் என வண்டலூர் பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது.