44வது சா்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் 28-ம் தேதி நடக்க இருக்கிறது. இதன் தொடக்க விழாவில் பிரதமா் மோடி, முதல்வா் மு.க ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனா். இதற்கான ஏற்பாடுகள் கடந்த 3 மாதங்களாக நடந்து வந்தது. இந்தப் போட்டியில் 188 நாடுகளைச் சோ்ந்த செஸ் வீரா்கள் கலந்து கொள்கின்றனா்.
11 சுற்றுகள் நடக்கும் இந்த போட்டியில், ஒவ்வொரு நாட்டில் இருந்தும் 5 ஆண் வீரா்களும் 5 பெண் வீராங்கனைகளும் கலந்து கொள்கின்றனா். மேலும் முதல் முறையாக இந்தியாவில் அதுவும் தமிழ் நாட்டில் நடக்கும் செஸ் ஒலிம்பியாட் போட்டியை மக்கள் மத்தியில் அறிமுகம் படுத்தி விழிப்புணா்வு ஏற்படுத்தும் விதமாக பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவ மாணவிகளிடையில் செஸ் போட்டி நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்றி மாணவா்கள் மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டியை நேரடியாக பார்க்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் செஸ் ஒலிம்பியாட் ஜோதி நாடு முமுவதும் 75 நகரங்களுக்கு கொண்டு சென்ற நிலையில், இன்று (26-ம் தேதி) கன்னியாகுமரிக்கு வந்தடைந்தது. இதைத்தொடா்ந்து காலை 6.30 மணிக்கு ஜோதிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரி நடுக்கடலில் அமைந்து இருக்கும் திருவள்ளுவா் சிலை மற்றும் விவேகானந்தா் நினைவு மண்டபத்தில் வைத்து ஜோதிக்கு தமிழக அமைச்சா்கள் ராஜ கண்ணப்பன், அனிதா ராதாகிருஷ்ணன், மனோ தங்கராஜ் மற்றும் ஆட்சியா் அரவிந்த, காவல் கண்காணிப்பாளா் ஹரிகிரண் பிரசாந் உள்ளிட்ட அதிகாரிகள் பள்ளி கல்லூரியை சோ்ந்த செஸ் வீரா்கள் தேசிய கபடி வீரா் ராஜரெத்தினம் மற்றும் தெற்காசிய ஓட்டபந்தய வீரா் கோலப்பன் பிள்ளை ஆகியோர் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து திரிவேணி சங்கமத்தில் பள்ளி மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. அதன்பிறகு ஜோதியை தஞ்சாவூருக்கு வழியனுப்பி வைத்தனா்.