வைரமுத்துவின் 'ஓ என் சமகாலத் தோழர்களே' என்ற கவிதையை பாடமாக நடத்திய ஆசிரியருக்கு வைரமுத்து பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.
பள்ளிக்கு கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தருமபுரியில் அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஒன்பதாம் வகுப்பு தமிழ்ப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ள வைரமுத்துவின் 'ஓ என் சமகாலத் தோழர்களே' என்ற கவிதையை கண் பார்வை அற்ற தமிழாசிரியர் தமிழ்ச்செல்வி பாடமாக நடத்திக் கொண்டிருந்தார். இதனை கண்ட அமைச்சர் அன்பில் மகேஷ் உடனே தனது செல்பேசியில் வைரமுத்துவிற்கு அழைத்து விஷயத்தை கூற, மகிழ்ச்சி அடைந்த வைரமுத்து ஆசிரியரிடம் பேசினார்.
அப்போது, தமிழாசிரியர் "ஐயா வணக்கங்கய்யா, உங்களோட கள்ளிக்காட்டு இதிகாசத்தை முழுசா ஆடியோவா கேட்டிருக்கேன்" என கூறவும் இதைக் கேட்டு மகிழ்ந்த வைரமுத்து "பிள்ளைகளுக்கு நன்றாக தமிழை ஊட்டுங்கள். பிள்ளைகளுக்கு நம்பிக்கையை கொடுங்கள். இரண்டு கண்கள் போனாலும் இரண்டு கண்களும் இருபது நகக் கண்களாக இருக்கிறது. அந்தப் பக்கம் வந்தால் நிச்சயமாக உங்களைப் பார்க்கிறேன். வாழ்க வாழ்க" எனக் கூறினார்.
தற்போது இந்த வீடியோ பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.