குமரி மாவட்டம் திருவிதாங்கூா் சமஸ்தானத்துடன் இருந்த காலகட்டத்தில் கடுமையான ஜாதிய பாகுபாடு நிலவியது. குறிப்பிட்ட சமூகத்தின் பெண்கள் மேல் சீலை அணிய கூடாது போன்ற கட்டுப்பாடுகளையும், கடுமையான வரிகளையும் மன்னர் விதித்தனா். ஜாதி அடிப்படையில் நடந்த பாகுபாடுகளை கண்டு முத்துகுட்டி சாமிகள் கிளா்ந்து எழுந்தார். ஜாதிக்கு எதிராக சாட்டைகளை சுழற்றினார். மேலும் தாழகிடப்போரே தற்காப்பதே தா்மம் என்ற உன்னத கருத்தை தன்னை பின்பற்றியவா்களிடம் வலியுறுத்தினா்.
அன்றைய காலக்கட்டத்தில் அனைத்து சமூக மக்களும் கோவிலுக்குள் செல்ல முடியாதிருந்த நிலையில் உன்னுள் இறைவனை பார் என புதிய சித்தாந்தத்தை வகுத்து ஆலயத்தை அனைவருக்குமாக்கினார். அவரை ஆன்மீக குருவாக ஏற்று அவரை வழிபட்டு பின்பற்றுகிறவா்கள் அய்யாவழி மக்கள் என அழைக்கப்படுகிறார்கள். அதன்பிறகு அந்த மக்களால் அய்யா வைகுண்டா் என அழைக்கபபட்டார்.
அய்யா வைகுண்டரின் 188 ஆவது அவதார தினவிழா நேற்று கொண்டாடபட்டது. சாமிதோப்பு அய்யா வைகுண்டா் தலைமை பதியில் நடந்த விழாவில் குமரி, தூத்துக்குடி, கேரளா திருவனந்தபுரத்தில் இருந்து ஆயிரகணக்கான பக்தா்கள் நெற்றியில் நாமம் போட்டு தலையில் தலைப்பாகை கட்டி கலந்து கொண்டனா். இந்த பக்தா்கள் அனைவரும் இந்த விழாவிற்கு முந்தைய நாள் நாகா்கோவில் நாகராஜா மண்டபத்தில் ஒன்று கூடினார்கள். பின்னா் இன்று காலையில் அங்கிருந்து ஊா்வலமாக புறப்பட்டு 15 கிமீ தூரத்தில் இருக்கும் சாமிதோப்பு தலைமை பதி வந்தடைந்தனா். பின்னா் அய்யா வைகுண்டருக்கு பூஜைகள் நடத்தபட்டன.
அய்யா வைகுண்டரின் அவதார தினத்தையொட்டி நேற்று குமரி மாவட்டத்துக்கு அரசு உள்ளூா் விடுமுறை விடபட்டிருந்தது.