
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தீக்குளித்த வைகோவின் மைத்துனர் மகன் சரவண சுரேஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து வைகோவின் மைத்துனர் மகன் சரவண சுரேஷ் இன்று காலை விருதுநகர் விளையாட்டு மைதானம் அருகே உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார். இதையடுத்து அருகிலிருந்தவர்கள் தீயை அணைத்து, அவரை அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர். அரசு மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள், சரவணசுரேசுக்கு 80 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டுள்ளதாக கூறினர். இதனால் அவர் தீவிர சிகிச்சைக்காக மதுரை அப்பல்லோ மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இதனிடையே மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மதுரை அப்பல்லோ மருத்துவமனைக்கு விரைந்து வந்து சரவண சுரேஷை சந்தித்து ஆறுதல் கூறினார். மருத்துவமனையில் இருந்து வெளியே வந்தபோது வைகோ கண்ணீர் விட்டு கதறி அழுதார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், என் மருமகன் தீக்குளிப்பில் உடல் முழுவதும் கருகி உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறார். பிழைக்க வாய்ப்பில்லை. தமிழக இளைஞர்களை கையெடுத்து கும்பிடுகிறேன். காலில் விழுந்து கேட்டுக்கொள்கிறேன் தீக்குளிக்காதீர்கள். வாழ்ந்து போராடுவோம் என அவர் கூறியிருந்தார்.
இந்நிலையில், தீக்குளித்த சரவண சுரேஷ் இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். சரவணசுரேஷ், வைகோவின் மனைவி ரேணுகாதேவியின் சகோதரர் ராமானுஜத்தின் மகன் ஆவார். இவரது சொந்த ஊர் கோவில்பட்டி. தொழில் நிமித்தம் காரணமாக விருதுநகரில் வசித்து வருகிறார்.
இவருடைய மகன் ஜெயசூர்யா தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டும், மகள் ஜெயரேணுகா தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பும் படித்து வருகிறார்கள். இவருடைய மனைவி அமுதா அரசு மேல்நிலைப்பள்ளியில் வேதியியல் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். சரவண சுரேஷ் உயிரிழந்ததை அறிந்த அவரது குடும்பமே கண்ணீர் விட்டு கதறி துடித்தது.