மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மயிலாடுதுறை நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார்.
நாகை மாவட்டம், சீர்காழியில் கடந்த ஏப்ரல் மாதம் அன்று அம்பேத்கர் பிறந்த நாள் விழாப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்தகூட்டத்தில் பங்கேற்ற திருமுருகன்காந்தி, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் விதமாகவும், பிரிவினையை தூண்டும் விதமாகவும் பேசியதாக மயிலாடுதுறை திருவெண்காடு காவல்துறையினர் அவர் மீது வழக்குபதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கின் விசாரணை சீர்காழி நீதித்துறை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த வழக்கு மீண்டும் நேற்று விசாரணைக்கு வந்தபோது, நீதிபதி செல்லப்பாண்டியன் முன்பு திருமுருகன்காந்தி ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது திருமுருகன் காந்தி சார்பாக மயிலாடுதுறை வழக்கறிஞர் சங்கத்தலைவர் வேலு குபேந்திரன் ஆஜரானார். சீர்காழியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பெரியார், அம்பேத்கார் சொன்ன கருத்துகளையே திருமுருகன் காந்தி பேசினார் என வழக்கறிஞர் வேலு நீதிபதியிடம் தெரிவித்தார். திருமுருகன் காந்தியும் அதையே நீதிபதியிடம் தெரிவித்தார்.
இதையடுத்து, திருமுருகன் காந்தி தொடர் வயிற்றுப்போக்கால் கடும் அவதிப்பட்டு வருகிறார் அவருக்கு உடனடி மருத்துவ சிகிச்சைகள் அளிக்க வேண்டும் என நீதிபதியிடம் வழக்கறிஞர் தெரிவித்தார். இதை கேட்ட நீதிபதி செல்லபாண்டியன், தனியார் மருத்துவமனையிலோ, அரசு மருத்துவமனையிலோ சட்டத்திற்கு உட்பட்டு திருமுருகன் காந்திக்கு மருத்துவ வசதிகள் செய்து தர வேண்டும் என காவல்துறையினருக்கு உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து, இந்த வழக்கின் விசாரணையை செப். 6-ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
இதனிடையே, தீவிர வயிற்றுப்போக்கால் அவதிப்படும் திருமுருகன் காந்தி எண்டோஸ்கோபி பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் வழக்கு விசாரணைக்காக சென்னை அழைத்துச் செல்லும் போது ராஜீவ் காந்தி மருத்துவமனை அல்லது சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் பரிசோதனையை செய்தால் சரியாக இருக்கும் என்றும் தன் வழக்கறிஞரிடம் திருமுருகன் காந்தி தெரிவித்துள்ளார்.