தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் திரை இயக்கத்தின் சார்பில், 6- வது உலக திரைப்பட விழா, திருவண்ணாமலை நகரில் உள்ள அருணாச்சலம் என்கிற திரையரங்கில், அக்டோபர் 16- ஆம் தேதி தொடங்கியது. 5 நாட்கள் நடைபெறும் விழாவில் 22 உலக திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன.
இந்த நிகழ்வின் தொடக்க விழாவுக்கு அறம் பட இயக்குநர் கோபிநயினார், நடிகை ஷீலா போன்ற திரை நட்சத்திரங்கள், எழுத்தாளர்கள் தமிழ்செல்வன் உட்பட பலரும் வந்து கலந்துக்கொண்டனர். மாவட்ட ஆட்சியர் கந்தசாமி குத்து விளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் கோபிநயினார், சோவியத்தில் ஒரு திரைப்பட விழா நடந்தால் எப்படியிருக்குமோ, அப்படியொரு விழாவாக இது இருக்க வேண்டும் என கற்பனை செய்துக்கொண்டு வந்தேன். இந்த நாட்டை ஒரு கம்யூனிஸ்ட் ஆள வேண்டும் என்பது என் விருப்பம். இந்த நாடு மட்டுமல்ல உலக நாடுகள் அனைத்தும் கம்யூனிஸ்ட்கள் ஆள வேண்டும். உலகத்தை ஆள கம்யூனிஸ்ட்களால் மட்டுமே முடியும். உலகத்தில் முதலாளித்துவம் கோட்பாடு, கம்யூனிஸ்ட் கோட்பாடு என இரண்டு கோட்பாடு உள்ளது. கம்யூனிஸ்ட் கோட்பாடு என்பது மக்கள் கோட்பாடு, மக்களின் வாழ்க்கைக்கான கோட்பாடாகும். ஆனால் முதலாளித்துவம் மக்களை ஏமாற்றி சுரண்டி வருகிறது.
இந்தியாவில் சினிமா எடுப்பது என்பது கடினம். தயாரிப்பாளருக்கு கூட கதை சொல்லிவிடலாம். ஆனால் ஒரு நடிகனுக்கு கதை சொல்றது, இங்க கஸ்டம். நம்மளை போல் ஒரு நடிகன் இருந்து விட்டால், அது நம்மோட பாக்கியம். ஆனால் அப்படி இங்கு கிடையாது. சினிமாவை அரசியலாக்க வேண்டும். அதை இடதுசாரி அரசியலாக்க வேண்டும். சினிமாவை அரசியலாக்கவில்லையெனில், அது முதலாளிகளின் சாத்தானாகிவிடும். அதை நம் மீது ஏவுவார்கள்.
ஒரு திரைப்பட பயிற்சி இன்ஸ்ட்டியூட்டில் பேச அழைத்தார்கள். அங்கு சென்று பேசினேன். அங்கு லட்சம் லட்சமாய் பணம் வாங்கிக்கொண்டு சினிமா பற்றி கற்று தருகிறார்கள். அங்குள்ள மாணவர்களிடம் வரலாறு குறித்து கேள்வி எழுப்பினேன். அவர்களுக்கு வரலாறு தெரியவில்லை. வரலாறே தெரியாமல் என்ன படம்மெடுத்து விட முடியும்.