துப்பாக்கிச் சூட்டை கண்டித்தும், ஸ்டெர்லைட்டை மூட வேண்டியும் வைகோ மறியலில் ஈடுபட்டார்.
இன்று காலை சுமார் 11 மணி அளவில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தனது தொண்டர்களுடன் நெல்லை ஜென்சன் பேருந்து நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டார். அவரோடு 100க்கும் மேற்பட்ட மதிமுகவினரும் 20 நிமிடங்களுக்கு கைது செய்யப்பட்டனர். இதனால் ஜென்சன் பகுதி முழுக்க போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்காக அறவழியில் போராட்டம் நடத்திய பொதுமக்களின் மீது ஈவு இறக்கம் இல்லாமல் சுட்டு தள்ளியதில் 13 பேர் உயிரிழந்தனர். ஆலையும் இதுவரை மூடப்படவில்லை. மத்திய, மாநில அரசுகள் இந்த சம்பவத்தில் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. அதனை கண்டிக்கிற வகையிலும், துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஸ்டெர்லைட்டை தூத்துக்குடியில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும். அதுவரையிலும் எங்களது போராட்டம் தொடரும் என்றார் வைகோ. இவர்களை கைது செய்த போலீசார் அருகில் உள்ள திருமண மண்டபத்திற்கு கொண்டு சென்றனர்.
திருநெல்வேலி திமுக எம்எல்ஏ ஏஎல்எஸ் லட்சுமணன் தலைமையில் சுமார் 20 பேர் ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்றும், துப்பாக்கிச் சூட்டை கண்டித்தும் மறியலில் ஈடுபட்டனர் அவர்களை போலீசார் கைது செய்தனர்.