Skip to main content

உயர்நீதிமன்ற உத்தரவை ஏற்ற வாகைக்குளம் சுங்கச் சாவடி

Published on 26/09/2023 | Edited on 26/09/2023

 

Vagaikulam tollbooth to accept High Court order
மாதிரி படம்

 

தூத்துக்குடி – நெல்லை தேசிய நெடுஞ்சாலையைச் சீரமைக்கும் வரை வாகைக்குளம் சுங்கச் சாவடியில் சுங்கக் கட்டணம் வசூலிக்கத் தடை விதிக்கக் கோரி திருநெல்வேலியைச் சேர்ந்த பெர்டியன் ராயன் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார்.

 

இது தொடர்பான வழக்கு எஸ். சுந்தர், பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் கடந்த 11 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், தூத்துக்குடி – நெல்லை தேசிய நெடுஞ்சாலை குண்டும் குழியுமாக இருப்பதைச் சுட்டிக்காட்டி, தூத்துக்குடி – நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வாகைக்குளம் சுங்கச்சாவடி, 50% கட்டணம் மட்டுமே வசூலிக்க உத்தரவு பிறப்பித்தார். கடந்த 6 ஆண்டுகளாக சாலை ஏன் மோசமாக உள்ளது என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பி இருந்தனர். அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்தி வைத்திருந்தனர். அதே சமயம் தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் 50% கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என்ற உத்தரவை ரத்து செய்யக்கோரி மனுத் தாக்கல் செய்திருந்தனர்.

 

இதையடுத்து இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘தூத்துக்குடி வாகைக்குளம் சுங்கச் சாவடியில் 50% கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாதது ஏன் எனவும், நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாமல் இருந்து விட்டுத் தடை உத்தரவை ரத்து செய்யக்கோரி மனுத் தாக்கல் செய்தது ஏற்புடையதல்ல. நீதிமன்ற உத்தரவுப்படி ஒரு நாளாவது 50 சதவீத கட்டணத்தை வசூல் செய்துவிட்டு நீதிமன்றத்தை நாடுங்கள் என நெடுஞ்சாலைத்துறைக்கு அதிருப்தி தெரிவித்தனர்.’ மேலும் இந்த வழக்கை வெள்ளிக்கிழமைக்கு (29.09.2023) ஒத்தி வைத்தனர். இந்நிலையில் வாகைக்குளம் சுங்கச் சாவடியில் நாளை காலை 8 மணி முதல் நாளை மறுநாள் காலை 8 மணி வரை 50 சதவீத சுங்கக் கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்