வாச்சாத்தி மலை கிராமத்தில் பழங்குடி பெண்கள், மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் தாக்குதல் வழக்கில் தண்டனை பெற்றவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் செப். 29ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது.
தர்மபுரி மாவட்டம், அரூர் அருகே உள்ளது வாச்சாத்தி மலை கிராமம். இந்த பகுதியில் கடந்த 1992ம் ஆண்டு வனத்துறை, காவல்துறை, வருவாய்த்துறை ஊழியர்கள் ஆகியோர் பழங்குடி பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்து வந்த தர்மபுரி மாவட்ட அமர்வு நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்டு இருந்த 215 பேரும் குற்றவாளிகள் என்று கடந்த 2011ம் ஆண்டு செப். 29ம் தேதி தீர்ப்பு அளித்தது.
இவர்களில் 126 பேர் வனத்துறை அலுவலர்கள், 84 பேர் காவல்துறையினர், 5 பேர் வருவாய்த்துறை ஊழியர்கள் ஆவர். இதில் பாலியல் வன்முறையில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட 17 பேர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 12 பேருக்கு தலா 10 ஆண்டுகளும், 5 பேருக்கு 7 ஆண்டுகளும் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தது. இவர்களைத் தவிர மற்றவர்களுக்கு வாச்சாத்தி பழங்குடி மக்களை துன்புறுத்தியது, உடைமைகளை சூறையாடியது உள்ளிட்ட பிரிவுகளில் தீர்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது. இந்த குற்றங்களுக்காக அவர்களுக்கு தலா 2 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த தீர்ப்பை எதிர்த்து தண்டனை பெற்றவர்கள், சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், தீர்ப்பு மட்டும் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த மார்ச் 4ம் தேதி, சம்பவம் நடந்த வாச்சாத்தி மலை கிராமத்தில் வழக்கை விசாரித்த நீதிபதி நேரில் சென்று ஆய்வு செய்தார். இதற்கிடையே, வாச்சாத்தி மேல்முறையீட்டு வழக்கில் வெள்ளிக்கிழமை (செப். 29) தீர்ப்பு அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.