தமிழ்நாட்டில் 15 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கான கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (03/01/2022) சென்னை சைதாப்பேட்டையில் உள்ள மாந்தோப்பு பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் சிறார்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்தப்பட்டுவருகிறது.
நிகழ்ச்சியில் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "கரோனாவின் இரண்டாவது அலையின் வீரியத்தை அரசு குறைத்துள்ளது. தமிழ்நாட்டில் பொருளாதாரம் மீண்டு வந்து கொண்டிருந்த நிலையில், ஒமிக்ரான் மிரட்டத் தொடங்கியுள்ளது. ஒமிக்ரான் பாதிப்பால் பொருளாதாரத்தின் மீட்சிப் பாதைத் தடைபடும் நிலை ஏற்பட்டுள்ளது. கரோனா அதிகரித்து வருவதால், பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் மிகவும் பாதுகாப்புடன் கவனமாக இருக்க வேண்டும். டெல்டாவைவிட ஒமிக்ரானின் பாதிப்பு குறைவாக இருந்தாலும் வேகமாகப் பரவக்கூடியது. நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கும் தடுப்பூசியை அனைவரும் போட்டுக்கொள்ள வேண்டும்.
ஒமிக்ரானில் இருந்து நம்மை தடுக்கும் கேடயம் முகக்கவசம் என்பதால், அனைவரும் அணிய வேண்டும்; தனிமனித இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும். 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள், தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். உங்கள் குடும்பத்தில் ஒருவனாகக் கேட்டுக் கொள்கிறேன், அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள்" என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் பொன்முடி, மருத்துவத்துறைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி மற்றும் அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.